காவித் துண்டு போட்டவரை தொட்டுப்பார்... திமுகவுக்கு ஹெச்.ராஜா சவால்!
தேனி: தமிழகத்தில் காவித்துண்டு அணிந்த ஒரு நபரைக் கூட திமுகவினரால் எதுவும் செய்ய முடியாது என பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பங்களாமேட்டில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பாஜக தலைவர் பி.சி.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா, மாநில செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக பங்கேற்றனர். அதில் சிறப்புரையாற்றிய ஹெச்.ராஜா, பாஜக அரசின் சாதனைகளையும், தமிழக அரசின் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய ஹெச்.ராஜா, மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு வந்து சேர்கிறது. அந்தத் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை மட்டுமே தமிழக அரசு செய்து வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழல், மகளிருக்கான உரிமைத் தொகை என திமுக அரசு பொய் வாக்குறுதிகளையும், ஊழலையும் செய்து வருகிறது. தமிழர்களை குடிகாரர்களாக மாற்றியதே திமுக அரசின் சாதனை என்று கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக பேசிய மதுரை ஆதீனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மிரட்டல் விடுத்திருப்பதற்கு ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து, மதுரை ஆதீனம் அல்ல, காவித் துண்டு போட்ட ஒரு நபரை கூட திமுகவால் எதுவும் செய்ய முடியாது. முடிந்தால் தொட்டு பாருங்கள் என்று அமைச்சர் சேகர் பாபுவுக்கு சவால் விடுத்தார்.
போப் ஆண்டவரை பல்லக்கில் தூக்குகிறார்களா? ட்விட் செய்த ஹெச்.ராஜா! கமெண்டில் கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் மற்றும் கச்சத்தீவு கோரிக்கைகளை முன் வைக்கிறார். உண்மையில் நீட் சட்டம், திமுக - காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்டது.
அதற்கு தடை விதித்தபோது உச்சநீதிமன்றத்தில் வழக்காடி அனுமதி பெற்று தந்தவர் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான். எனவே முதலமைச்சர் ஸ்டாலின், நளினி சிதம்பரத்திடம் நீட் தேர்விற்கு விலக்கு கேட்க வேண்டும், இல்லை உச்சநீதிமன்றத்தின் கதவை தட்ட வேண்டும். அதை விடுத்து சட்டமன்றத்தில் அமைச்சரவையில் சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்புவது எல்லாம் தேவையற்றது என்று தெரிவித்தார்.