ஓ.பன்னீர்செல்வம் ஊரில் கொடி பறக்கவிட்ட ஸ்டாலின்! காணொலியை தவிர்த்து நேரில் களமிறங்கிய பின்னணி!
தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து கொடி பறக்கவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
முதலமைச்சர் நினைத்திருந்தால் இந்நிகழ்ச்சியை சென்னையில் இருந்தவாறே காணொலி மூலம் நடத்தியிருக்க முடியும். ஆனால் அப்படி செய்யாமல் ஓ.பி.எஸ்.ஸின் கோட்டைக்குள்ளே புகுந்து விளையாடியிருக்கிறார்.
தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தீபராஜன்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்... ரூ.5 லட்சம் நிவாரணம்
முதலமைச்சரின் அடுத்த அரசு முறை பயணம் அநேகமாக சேலம் மற்றும் கோவை மாவட்டமாக தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தேனி நிகழ்ச்சி
தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 114 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 40 பணிகளை திறந்து வைத்து, 74 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 102 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 10,427 பயனாளிகளுக்கு 71 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சட்டத்துறை
சட்டத்துறை சார்பில் தேனியில் 89 கோடியே 1 இலட்சத்து 11 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தேனி அரசு சட்டக் கல்லூரிக் கட்டடம் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள் திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 5 கோடியே 32 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவிலான பணிகளை தொடங்கி வைத்தார்.

பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜி.கல்லுப்பட்டி, பெரியகுளம், பூதிப்புரம், மேலசிந்தலைச்சேரி, எருமலைநாயக்கன்பட்டி அம்மாபுரம் மற்றும் தேவதானப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 7 கோடியே 62 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகங்கள், நூலகங்கள் மற்றும் குடிநீர் வசதிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

நகராட்சி நிர்வாகம்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையக் கட்டடம், ஓடைப்பட்டி பேரூராட்சியில் 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொன்ராசு கவுண்டர் குளம் மேம்பாட்டுப் பணிகள் கம்பம் நகராட்சியில் 7 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் வாரச் சந்தை மேம்படுத்தும் பணி, தேனியில் 3 கோடியே 33 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம்

ஊரக வளர்ச்சி
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் எ.வாடிபட்டி ஊராட்சியில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி. கீழவடகரை ஊராட்சியில் தார்சாலை அமைக்கும் பணி, அத்தியூத்து ஊராட்சியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி உள்ளிட்ட 18 கோடியே 5 இலட்சத்து 1 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகள்

நலத்திட்ட உதவி
மேலும் அனைத்து துறைகளின் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் 10,427 பயனாளிகளுக்கு 71 கோடியே 4 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 3 முறை முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என பல உயர் பொறுப்புகளை அலங்கரித்த ஓ.பி.எஸ். கூட இவ்வளவு நலத்திட்டங்களை தேனி மாவட்டத்திற்கு கொண்டுவரவில்லை என பெருமிதம் தெரிவிக்கின்றனர் தேனி மாவட்ட திமுகவினர்.