தம்பி கல்யாணம்.. அண்ணன் தற்கொலை.. ‘திடீர் திருப்பம்’ - போலீசாரை அதிரவைத்த தந்தையின் வாக்குமூலம்!
தேனி : திருமண நாளன்று மணமகனின் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் தந்தையே மகனை அடித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனக்கு திருமணம் செய்து வைக்காமல், தம்பிக்கு திருமணம் செய்து வைத்ததற்காக தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
அடித்துக் கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறிய தந்தை, போலீசாரிடம் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

தம்பிக்கு திருமணம்
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் அய்யாசாமி. இவருக்கு பூவேந்திரன், அரவிந்தன் என இரண்டு மகன்கள் உள்ளனர். பூவேந்திரன் வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக ஊர் சுற்றி வந்துள்ளார். இதனிடையே அரவிந்தன் தனது உறவுக்கார பெண்ணை காதலிப்பதாக தனது தந்தையிடம் கூறி வந்துள்ளார். இதனையடுத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் பேசி முடிவு செய்தனர்.

தூக்கில் தொங்கிய நிலையில்
அய்யாசாமியின் இரண்டாவது மகனான அரவிந்தனின் திருமணம் முடிந்து அனைவரும் வீட்டுக்கு சென்றிருந்தனர். அப்போது மூத்த மகனான பூவேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். திருமணமாகாத விரக்தியில் பூவேந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை கூறியுள்ளார். இதையடுத்து அவசர அவசரமாக அவரது உடலை எரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தலையில் காயம்
அவரது தலையில் காயம் இருந்தது தொடர்பாக அங்கிருந்தோர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அய்யாசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர். தனக்கு திருமணம் செய்து வைக்காமல் தம்பிக்கு திருமணம் செய்து வைத்ததால் பூவேந்திரன் தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அய்யாசாமி தெரிவித்துள்ளார்.

அடித்து கொலை
அப்போது இரும்பு கம்பியால் தாக்கியதில் பூவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அய்யாசாமி ஒப்புக் கொண்டார். பூவேந்திரனின் உடலை தூக்கில் தொங்கியது போல தொங்கவிட்டதாகவும், பின்னர் வேக வேகமாக உடலை எரிக்க ஏற்பாடுகளைச் செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அய்யாசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தந்தை கைது
மேலும், பூவேந்திரனின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தம்பிக்கு திருமணம் நடந்த நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணனை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.