பரீட்சை முடிந்து திரும்பியதும் கதறிய மாணவிகள்.. தாய் இறந்ததை மறைத்த தந்தை.. உருக்கமான சம்பவம்!
தென்காசி : விபத்தில் மனைவி இறந்த நிலையிலும், மகள்களிடம் சொல்லாமல் அவர்களை தேர்வு எழுத அனுப்பிய தந்தையின் செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
மகள்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக விபத்தில் மனைவி உயிரிழந்ததை மறைத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தந்தை அனுப்பி வைத்துள்ளார்.
விபத்தில் தாய் பலியானதே தெரியாமல் தேர்வு எழுதச் சென்ற நிலையில், திரும்பி வந்த மாணவிகள் நடந்ததை அறிந்து கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய் விபத்தில் பலி
சங்கரன்கோவில் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் தனியார் கேஸ் ஏஜென்சியில் சிலிண்டர் விநியோகிப்பாளராக பணியாற்றி வருகிறார். பெரியசாமியின் மனைவி முத்துமாரி (40). இவர்களுக்கு வாணிஸ்ரீ (15), கலாராணி (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நடந்த விபத்தில் முத்துமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பத்தாம் வகுப்பு தேர்வு
நேற்று பெரியசாமி - முத்துமாரி தம்பதியரின் இரு மகள்களுக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இருந்ததால் பெரியசாமி தன் மகள்களிடம் அவர்களுடைய தாய் இறந்ததை தெரிவிக்காமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது வீட்டில் இருந்து படிக்க வேண்டாம் என்றும் கூறி தலைமை ஆசிரியரின் வீட்டில் தங்க வைத்துள்ளார்.

தேர்வு எழுதிய மகள்கள்
தங்களது தந்தை சொன்னதைக் கேட்டு அந்த மாணவிகளும் படித்து நேற்று கணித பாட தேர்வை எழுதியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரையும் நேரடியாக மயானத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இதற்கிடையே, முத்துமாரியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மதியம் 1 மணிக்கு அவர்களது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டு, அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கதறிய மாணவிகள்
மயானத்திற்குச் சென்ற பிறகுதான் அவர்களின் தாய் இறந்த தகவலை பெரியசாமி தெரிவித்துள்ளார். மயானத்துக்கு சென்ற மாணவிகள், தாய் இறந்ததை அறிந்து கதறி அழுதனர். பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என விஷயத்தையே சொல்லாமல் இருந்த தந்தையின் செயலும், மாணவிகள் கதறி அழுத நிகழ்வும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.