தேனி விழா.. எதுவும் பேசவில்லை.. அப்படியே புறப்பட்டு சென்ற ஒபிஎஸ்.. ஏன்? பரபரப்பு
தேனி: தேனி அருகே நாகலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆளும் அதிமுக அரசின் சாதனைகளைப் பற்றியோ, நடைபெறும் அரசு விழா குறித்த நிகழ்ச்சி குறித்தோ எதுவும் பேசாமல் விழா முடிந்ததும் அப்படியே சென்றுவிட்டார்.
சென்னையிலிருந்து நேற்று முன்தினம் தேனிக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வருகை தந்தார். பெரியகுளம் அருகே கைலாசபட்டியிலுள்ள தனது பண்ணை வீட்டில் வசித்தார். ஓ.பி.எஸ் தேனி வந்ததும், அவரை சந்திக்க மாவட்டக் கட்சி நிர்வாகிகள் வரிசையாக பண்ணை வீட்டுக்கு வந்தனர்.
தொடர்ந்து அன்று இரவு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம், உசிலம்பட்டி எம்.எல்.ஏ நீதிபதி, மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன், மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான் உள்ளிட்டோரும் ஓபிஎஸ்ஸை பண்ணை வீட்டுக்கு வந்து சந்தித்தனர்.
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் - ஓபிஎஸ் பதிவால் ரத்தபூமியாகிப் போச்சு ட்விட்டர்!

ஓபிஎஸ் சந்திப்பு
இதேபோல் முன்னதாக விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற மாநில பொதுச்செயலாளர் முனீஸ்வரன், திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஆணையூர் ஊராட்சி எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராஜசேகரன், சிவகங்கை மாவட்ட துணைச்செயலாளர் கருப்பையா, சிவகங்கை மாவட்ட கவுன்சிலர் சின்னையா அம்பலம், விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் நாகராஜன், அருப்புக்கோட்டை நகர மகளிர் அணி செயலாளர் பிரேமா, திருவண்ணாமலை மகளிர் அணி வடக்கு மாவட்ட செயலாளர் இந்திரா பாலமுருகன் உள்ளிட்ட பலர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். முதல்வர் வேட்பாளர் விவகாரம் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் நிர்வாகிகள் பலர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

100 அடி பேனர்
இத்தகைய பரபரப்பான சூழலில் இன்று காலை தேனி நாகலாபுரத்தில், அரசு நகரும் நியாயவிலைக்கடை தொடக்க நிகழ்வில் கலந்துகொள்ள ஓ.பி.எஸ். பெரியகுளத்திலிருந்து புறப்பட்டார் வழி நெடுகிலும், கட்சியினர் பேனர்வைத்தும், பட்டாசு வெடித்தும், வாகனத்தில் மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேனியில் அரண்மனைப்புதூர் விலக்குப் பகுதியில் சென்டர்மீடியனில் 100அடி நீள பேனர் வைத்து கட்சியினர் வரவேற்றனர். அதில் `நாளைய முதல்வரே...' என எழுதப்பட்டிருந்தது. மற்ற அனைத்து பேனர்களிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரும், படமும் தவறாமல் இடம்பெற்று இருந்தது. வழிநெடுகிலும் பலர் அம்மாவின் வாரிசு என்று குரல் எழுப்பியபடி இருந்தனர்.

அமைதியாக சென்ற ஒபிஎஸ்
இதனிடையே நாகலாபுரத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அரசு நகரும் நியாய விலைக்கடையை தொடங்கி வைத்தார். அத்துடன் கடனுதவியும் வழங்கினார். வழக்கமாக ஒவ்வொரு விழாவிலும் ஆளும் அதிமுக அரசின் சாதனைகளைப் பற்றியோ, நடைபெறும் அரசு விழா நிகழ்ச்சி குறித்தோ துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசுவார். ஆனால் இந்த விழாவில் எதுவுமே பேசவில்லை. விழா முடிந்ததும் அப்படியே கிளம்பி சென்னை புறப்பட்டார். இது அதிமுகவினரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒபிஎஸ் வெளியிட்ட ட்விட்
நாளை மறுநாள் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பட உள்ளது. , அ.தி.மு.க மட்டுமல்லாது, தமிழக அரசியல் களத்திலும் இந்த அறிவிப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இந்த சூழலில் நாகலாபுரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பு இன்று ஒபிஎஸ் வெளியிட்ட ட்விட் பதிவில், , ``தமிழக மக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!" என கூறியிருக்கிறார். இதனால் ஒ பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுப்பார் என்ற பரபரப்பு நிலவுகிறது.