எடப்பாடி உருவபொம்மை எரிப்பு.. திரண்டுவந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ‘செருப்பால் அடித்து’ தேனியில் பரபரப்பு!
தேனி : தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில், எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அவரது உருவபொம்மையை எரித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஓ.பன்னீர்செல்வத்தை அவமதித்ததாக தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக அராஜக போக்கை கடைபிடித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்ஸர் அடித்த இபிஎஸ்! ஓபிஎஸ்ஸை ஒட்டு மொத்தமாய் கழட்டிவிட்ட தேனி! விளம்பரம் கொடுத்து என்ன பிரயோஜனம்?

பொதுக்குழுவில்
பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழு தொடங்கியதில் இருந்தே பல்வேறு கூச்சல் குழப்பங்கள் நிகழ்ந்த நிலையில், முக்கிய நிர்வாகிகளும், தன்னை அவமதிக்கும் வகையிலேயே நடந்துகொண்டதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக அதிருப்தி அடைந்தார். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை கோஷம் ஓங்கி ஒலித்த நிலையில், தீர்மானங்களை நிறைவேற்றாமலேயே பொதுக்குழு கலைந்தது.

ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அ.தி.மு.க பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு எதிராகச் செயல்பட்ட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்து ஓபிஎஸ் ஆதரவு அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உருவபொம்மை எரிப்பு
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள கிராம சாவடி அருகே அ.தி.மு.கவினர் ஏராளமானோர் திரண்டு இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக சர்வாதிகார அராஜக போக்கை கடைபிடித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கும் விதமாக அவரது உருவபொம்மையை செருப்பால் அடித்து, சாலையில் போட்டு எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ்
உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, எடப்பாடி ஒழிக என கோஷமிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த உத்தமபாளையம் போலீசார் அவர்களை சமாதானம் செய்து கூட்டத்தைக் கலைத்தனர்.