அண்ணன் ஆப்ரிக்காவில்! தம்பி ஆண்டிப்பட்டியில்! களைகட்டும் கச்சேரி! இது ஓபிஎஸ் வீட்டு அரசியல்!
தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் இடையே பனிப்போர் தொடங்கியுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் அண்ணன் ரவீந்தரநாத் எம்.பியை ஓவர் டேக் செய்து தனது செல்வாக்கை உயர்த்தி வருகிறார் தம்பி ஜெயபிரதீப்.
கட்சிக்காரர்கள் வீட்டு கல்யாணம், காதுகுத்து, நல்லது கெட்டது என அனைத்திலும் தவறாமல் ஆஜராகிவிடும் ஜெயபிரதீப், தனக்கென தனி ஆதரவாளர்கள் வட்டத்தை நாளுக்கு நாள் பெருக்கி வருகிறார்.
இப்போது அரசு முறை பயணமாக துணை குடியரசுத் தலைவருடன் ஆப்ரிக்கா சென்றுள்ள ஓ.பி.எஸ்.ஸின் மூத்த மகன் ரவீந்தரநாத் எம்.பி., மாதத்தின் பாதி நாட்களை டெல்லியில் கழிப்பதால் அவரை கட்சியினர் அணுகுவது கடினமாக உள்ளது.
மூன்று முறை முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்த நிகழ்கால பரதன் எனது தந்தை.. ஜெயபிரதீப் பரபரப்பு அறிக்கை

ஓ.பி.எஸ். மகன்கள்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப்புக்கு அரசியல் ஆசை நிறைய இருப்பினும் கூட அதற்கு அணை போட்டு போட்டு வைத்திருக்கிறார் அவரது தந்தை. காரணம் ஏற்கனவே மூத்த மகன் ரவீந்தரநாத் எம்.பி.யாக உள்ளதால் இளைய மகனின் அரசியல் வரவை ஓ.பி.எஸ்.அறவே விரும்பவில்லை. இதனால் ஆன்மிகம் பக்கம் அதிகம் நாட்டம் செலுத்தத் தொடங்கிய ஜெயபிரதீப்பை அவரது ஆதரவாளர்கள் ஆன்மிகச் செம்மல் என அழைத்து வருகிறார்கள்.

ஆன்மிகச் செம்மல்
இந்த ஆன்மிகச் செம்மலை அரசியல் செம்மலாக ஆக்காமல் விடமாட்டார்கள் போல் அவரது ஆதரவாளர்கள். ஓ.பி.எஸ். ஊரில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தனக்கு வரும் கல்யாணம், காதுகுத்து, கருமாதி, என எந்த அழைப்பாக இருந்தாலும் அதனை தவிர்க்காமல் ஆஜராகிவிடுகிறார் ஜெயபிரதீப். இது அண்மைக்காலமாக அவருக்கான செல்வாக்கை தேனி மாவட்டத்தில் உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. காரணம் ஓ.பி.எஸ். சென்னையிலும், அவரது மூத்த மகன் ரவீந்தரநாத் டெல்லியிலும் மாதத்தின் பாதி நாட்களை கழிப்பதே ஆகும்.

ஆப்ரிக்காவில் ரவி
ரவீந்தரநாத் எம்.பியை பொறுத்தவரை நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் உறுப்பினராக இருப்பதால் அது சார்ந்த அலுவல் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டி பல மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்போது கூட துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுடன் ஆப்ரிக்க நாட்டிற்கு ஒரு வார கால அரசு முறை பயணமாக சென்றிருக்கிறார். ஆனால் அதே வேளையில் அவரது தம்பி ஜெயபிரதீப் ஆண்டிப்பட்டி தொடங்கி கம்பம் வரை கட்சிக்காரர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் ஆஜராகி அவர்களை தன்வயப்படுத்தி வருகிறார்.

ஜீன்ஸ் சர்ட்
அதிமுக கரைவேட்டி அணிவதை தவிர்த்து பெரும்பாலும் ஜீன்ஸ் ஷர்ட் அணிவதல் ஆர்வம் காட்டுபவர் ஜெயபிரதீப். இதனிடையே மகன்களுக்கு இடையே தொடங்கியுள்ள பனிப்போரால் இப்போதெல்லாம் பண்ணை வீட்டிலேயே ஓ.பி.எஸ். அதிக நேரத்தை செலவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.