ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்புடன் மல்லுகட்டும் பாஜக.. கம்பம் தொகுதி யாருக்கு?
தேனி: கம்பம் தொகுதியை கேட்டு கம்பு சுற்றி வருகிறது பாஜக, ஆனால் கம்பம் தொகுதியை ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்புக்கு தர வேண்டும் என அங்குள்ள அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் கம்பம் தொகுதி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது.. இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் உள்ள அணியில் பாஜக இடம் பெற்றுள்ளது.
பாஜகவிற்கு 20 தொகுதிகளை ஒதுக்கிஅதிமுக தலைமை நேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 20 தொகுதிகள் எவை எவை என்பது குறித்து எதிர்பார்ப்பு பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

கொங்கு மண்டலம்
ஏனெனில் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்குமண்டலத்தில் அதிக தொகுதிகளை அதிமுக கேட்டு வருகிறது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் தொகுதிகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதிமுக தொகுதி
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் தொகுதியை பாஜக கேட்டு காய்நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம், கம்பம், ஆண்டிபட்டி என 4 தொகுதிகள் உளளன. கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவிடம் இருந்த ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளை திமுக வென்றுவிட்டது. போடி, கம்பம் தொகுதிகள் அதிமுக வசம் உள்ளது. போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் தொகுதியில் எஸ்டிகே.ஜக்கையன் எம்எல்ஏவாக உள்ளார்கள்.

பாஜக விருப்பம்
இந்நிலையில் கம்பத்தை குறி வைத்து பாஜகவினர் காய் நகர்த்தி தொகுதியை தலைமையிடம் கேட்டும் வருகின்றனர். இந்த தொகுதியில் தான் ஓபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப்பை, கம்பம் தொகுதியில் நிறுத்திட, 100 பேர் வரை விருப்ப மனு செய்திருக்கிறார்கள். பாஜக மற்றும் அதிமுகவிடையே கம்பம் தொகுதியில் போட்டியிடுவதில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

யாருக்கு கிடைக்கும்
அதிமுக மேல்மட்டத்தின் விருப்பத்தில் தான் ஜெயபிரதீப்பிற்காக விருப்ப மனு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், அதிமுக தலைமை ஓபிஎஸ் மகனுக்கு சீட் கொடுக்க வாய்ப்பு உள்ளதா அல்லது பாஜகவிற்கு விட்டு தரப்போகிறதா என்பது குறித்த எதிர்பார்ப்பு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக, பாஜகவினரிடையே அதிகமாக உள்ளது.