Exclusive: என்னை ஆஃப் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள்! அது நடக்காது! சையது கான் தில் பேட்டி!
தேனி: அதிமுகவில் சசிகலாவை இணைக்கும் விவகாரத்தில் இருந்து தாம் ஒரு போதும் பின்வாங்க மாட்டேன் என கூறுகிறார் தேனி மாவட்ட அதிமுகச் செயலாளர் எஸ்.பி.எம்.சையது கான்.
தன்னை சிலர் ஆஃப் செய்து வைக்க முயற்சிப்பதாகவும் ஆனால் அது நடக்காது எனவும் தெரிவிக்கிறார்.
அதிமுகவில் ஆரம்பக்காலம் தொட்டு பயணிப்பவன் என்பதால் தேனி மாவட்ட நிர்வாகிகள் தன்னை போட்டியின்றி மீண்டும் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்ததாக கூறினார்.

இதனிடையே இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியின் விவரம் வருமாறு;
கேள்வி: சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என மிகவும் தீவிரம் காட்டிய நீங்கள், இப்போது ஆஃப் ஆகிவிட்டீர்கள் போல் தெரிகிறதே?
பதில்: நான் ஆஃப் ஆகவில்லை, என்னை ஆஃப் செய்து வைக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அது நடக்காது. சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கருத்தில் இருந்து எப்போதும் பின்வாங்க மாட்டேன். இப்போதும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்.
ஜெயலலிதா போல் ஆட்சி செய்வேன்.. அசராமல் சொன்ன சசிகலா! திமுக ஆட்சியில் மனசு நிறையவில்லை என்றும் குட்டு
கேள்வி: நீங்க இப்படியே பேசிக்கொண்டிருந்தால் உங்க மீது இ.பி.எஸ். நடவடிக்கை எடுக்கமாட்டாரா?
பதில்: எப்படி எடுக்க முடியும். கட்சி நன்றாக இருக்க வேண்டும், ஒன்றிணைந்து பலமுடன் செயல்பட வேண்டும் என ஆரம்பக்கால கட்சிக்காரன் என்ற அடிப்படையில் எனது கருத்தை தெரிவிக்கிறேன். எனக்கு மனதில் தோன்றுவதை பேசக்கூடாது என யார் சொல்ல முடியும்.
கேள்வி: சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் மீண்டும் பேசினீர்களா?
பதில்: அதெப்படி பேசாமல் இருப்பேன். எனது கோரிக்கையை தெரிவித்திருக்கிறேன். ஆனால் அதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
கேள்வி: உங்களை போலவே ஓ.பி.எஸ்.தம்பி ஓ.ராஜாவும் சசிகலா விவகாரத்தில் மிகத் தீவிரம் காட்டினார், ஆனால் அவரும் இப்போது அமைதியாகிவிட்டது போல் தெரிகிறதே?
பதில்: அவரை பற்றி என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும். எனக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை, நான் தனிப்பட்ட முறையில் எனக்கு சரின்னு படுவதை சொல்கிறேன். அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என நீங்கள் அவரை தான் கேட்கனும்.
கேள்வி: மீண்டும் நீங்கள் தேனி மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள், இது ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லையே?
பதில்: அதிமுகவில் ஆரம்பக்காலம் தொட்டு பயணிப்பவன் என்பதால் தேனி மாவட்ட நிர்வாகிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து என்னை போட்டியின்றி மீண்டும் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்தார்கள். இதற்கும் நீங்கள் கேட்பதற்கும் தொடர்பில்லை.