வேட்பு மனுவில் தவறான தகவல்.. ஓபிஎஸ் & அவரது மகன் மீது வழக்குப்பதிவு.. தேனி போலீசார் அதிரடி
தேனி: வேட்பு மனுவில் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்துக்கு எதிராகத் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இவரது மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் இருந்து எம்பியாக உள்ளார்.

தேர்தல் சமயத்தில் இருவரும் சொத்து உள்ளிட்டவை குறித்து உண்மையான தகவல்களை மறைத்து தவறான தகவல்களைக் குறிப்பிட்டுள்ளதாகவும் தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் மிலானி தேனி எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
இது தொடர்பான விசாரணையில், CRPC-190,200 ஆகிய பிரிவுகளின் கீழ் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குத் தொடர போதுமான முகாந்திரங்கள் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ப.ரவிந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு கடந்த ஜன.7இல் உத்தரவிட்டார்.
ஓபிஎஸ் & அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்ய தேனி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..என்ன காரணம்?பரபர தகவல்
இது தவிர வழக்கைத் தொடுத்த மிலானிக்கு சாட்சிய பாதுகாப்பு சட்டம் 2018-ன் படி உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பிப்.7ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.