ஓபிஎஸ் & அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்ய தேனி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..என்ன காரணம்?பரபர தகவல்
தேனி: வேட்பு மனுவில் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யத் தேனி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக வென்ற போதிலும் தேனியில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
வணக்கம்டா மாப்ள.. இந்தியாவில் சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் மதுரைக்கு 3-வது இடம்!
அதேபோல கடந்த சட்டசபைத் தேர்தலிலும் போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

பரபர குற்றச்சாட்டு
இந்நிலையில், தேர்தல் சமயத்தில் சொத்து உள்ளிட்டவை குறித்து உண்மையான தகவல்களை மறைத்து தவறான தகவல்களைக் குறிப்பிட்டுள்ளதாகவும் இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் மிலானி குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தேனி எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

மனு
மிலானி தாக்கல் செய்த மனுவில், "2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.ப.ரவீந்திரநாத், சட்டசபைத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் வென்ற ஓ.பன்னீர்செல்வம் தங்கள் வேட்பு மனுக்களில் சொத்து, ஆண்டு வருமானம், கடன், கல்வித் தகுதி உள்ளிட்ட விபரங்களை மறைத்து, வேண்டுமென்ற தவறான தகவல்களைக் குறிப்பிட்டுள்ளனர். இதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன.

முகாந்திரங்கள்
தமிழக முதல்வராகவும் அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர். எனவே அவரை எதிர்த்துத் தொடர்ந்துள்ள எனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்து. இந்த மனு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, CRPC-190,200 ஆகிய பிரிவுகளின் கீழ் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குத் தொடர போதுமான முகாந்திரங்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.

வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ப.ரவிந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், உந்த வழக்கை தேனி மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பிப்.7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இது தவிர வழக்கைத் தொடுத்த மிலானிக்கு சாட்சிய பாதுகாப்பு சட்டம் 2018-ன் படி உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.