அண்ணன் உதயசூரியன்; தம்பி இரட்டை இலை: ஆண்டிபட்டியில் 2-வது முறையாக கோதாவில் இறங்கிய சகோதரர்கள்!
தேனி: ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளராக மகாராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் லோகிராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இருவருமே சகோதரர்கள் ஆவர்.
இவர்கள் இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக எதிரெதிர் அணியில் களம் இறங்குகின்றனர். .2019-ல் ஆண்டிபட்டியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மகாராஜன், தனது தம்பி லோகிராஜனை 2ஆயிரத்து 323 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஆண்டிப்பட்டி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதியாகும். தமிழக மக்களிடம் செல்வாக்கு பெற்ற எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை முதல்வராக அரியணையில் அமர்த்திய பெருமைக்குரியது ஆண்டிப்பட்டி. தற்போது இங்கு திமுக வேட்பாளராக மகாராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் லோகிராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? இங்குதான் விஷயமே இருக்கிறது.

அண்ணன்-தம்பி தான் வேட்பாளர்கள்
அதாவது இந்த மகாராஜனும், லோகிராஜனும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர். இவர்கள் இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக எதிரெதிர் அணியில் களம் இறங்குகின்றனர். .ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுகவின் கோட்டையாகும். இங்கு 2001 முதல் 2016 வரை அதிமுகவே வெற்றி பெற்றிருந்தது. 2016-ல் அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த தங்கதமிழ்ச்செல்வன் அமமுக, திமுக என சென்றதால், 2019-ல் இங்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்தது.

இடைத்தேர்தலில் அண்ணன் வெற்றி
சகோதரர்கள் இருவர் நேருக்கு நேர் மோதியதால் இந்த தொகுதி கவனம் பெற்றது. இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் மகாராஜன், தனது தம்பி லோகிராஜனை 2ஆயிரத்து 323 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். தொடர்ந்து இருவரும் இத்தொகுதியில் காலூன்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள், கரோனா காலத்தில் நலத்திட்ட உதவி போன்றவற்றை செய்து வந்தார். லோகராஜனும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இரண்டாவது முறையாக போட்டி
இந்த நிலையில் இருவருமே இத்தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சிகளில் விருப்பமனு அளித்திருந்தனர். இருவருக்குமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. அண்ணன், தம்பி தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக எதிரெதிரே இரண்டாம் முறையாக களம் காண்பதால் ஆண்டிப் பட்டி தொகுதி விறுவிறுப்பை அடைந்துள்ளது.