வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளம்.. 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
தேனி : தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு கம்பம் போடி போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் வைகை அணையிலிருந்து ஏற்கனவே மதுரை திண்டுக்கல் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தேனியில் உற்பத்தியாகும் வையை ஆறு ஐந்து மாவட்ட மக்களின் பாசன மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.

மூல வைகை ஆற்று நீரோடு திண்டுக்கல், தேனி, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கிளை ஆற்று நீரும் சேர்வதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து அணையில் உள்ள பெரிய மதகுகள் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரத்து 232 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பரித்து கொட்டும் நீரானது வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி சீறிப்பாய்கிறது.
ஏற்கனவே அணை நிரம்பிய நிலையில் தற்போது உபரியாக வரும் தண்ணீர் அப்படியே திறக்கப்பட்டு வருகிறது மேலும் மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.. அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது..
இதன் காரணமாக தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட வைகை ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர். ஆற்றங்கரையை ஒட்டி உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வரத்தை காண ஆற்றுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்..