பார்க்க அப்பாவி போல் இருக்கும் இவர் பெயர் மணிமேகலை.. செய்த பகீர் காரியம் இருக்கே... மிரண்டுபோன தேனி
தேனி: தேனியில் ஜவுளிக்கடை ஒன்றில் மேனேஜராக உள்ள நாகராஜன் என்பவர் ஏடிஎம்மில் பணத்தை போட முயன்ற போது, உதவி செய்வதாக நடித்து, அப்படியே அந்த பணத்தை அபேஸ் செய்த இளம் பெண் மணிமேகலையை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

தேனி அருகே குன்னூரைச் சேர்ந்தவர் நாகராஜன் (47). இவர் தேனியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் மேனேஜராக வேலை செய்து வருகிறார்.
நாகராஜன் கடந்த ஜனவரி 25ம் தேதி நிறுவனத்தின் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து வந்தார். தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணத்தை செலுத்துவதற்காக ஏடிஎம் முன்பு நின்று கொண்டிருந்தார்.

50 ஆயிரம் பணம்
பின்னர் ஏடிஎம்மின் உள்ளே சென்ற நகராஜன், பணத்தை செலுத்த முயற்சித்துள்ளார்.அப்போது ஏடிஎம் உள்ளே நின்று கொண்டிருந்த மணிமேகலை என்ற பெண், உங்களுக்கு உதவி செய்கிறேன். என்னிடம் பணத்தை தாருங்கள் நான் பணத்தை செலுத்துகிறேன் என்று கூறி அவரிடம் இருந்த 50ஆயிரம் பணத்தை வாங்கி உள்ளார்.

ஏமாற்றிய மணிமேகலை
அதில் ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டும் மீண்டும் மீண்டும் ரிஜெக்ட் ஆகி வந்துவிட்டது. 49500 ரூபாய் பணத்தை செலுத்துவது போல் நடித்துள்ளார். பின்னர் பணம் செலுத்திவிட்டதாக கூறியுள்ளார். அப்போது நகராஜன் பணத்திற்கு ரிசிப்ட் எங்கே என்று கேட்டுள்ளார். அப்போது மணிமேகலை சில நேரங்களில் ரிசிப்ட் வராது, கணக்கில் வரவு வைத்துவிடுவார்கள் என்று கூறி சமாளித்து அனுப்பிவிட்டார்.

ஏமாந்த நாகராஜன்
இதை நம்பி நாகராஜன், தனது ஜவுளி கடை உரிமையாளரிடம் பணத்தை செலுத்திவிட்டதாக கூறியிருக்கிறார். ஆனால் எஸ்எம்எஸ் ஏதும் வராததால், நேராக வங்கிக்கு சென்று நாகராஜன விசாரித்துள்ளார்கள். பணம் வரவு வைக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தான் ஏமாற்றப்பட்டது குறித்து வங்கியில் 27ம் தேதி புகார் அளித்தார்.

சிக்கிய மணிமேகலை
அதன்பேரில் ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமராவை சோதித்த போது மணிமேகலை என்ற பெண் பணத்தை நூதன முறையில் கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து நாகராஜன் அளித்த புகாரின் பேரில் தேனி எஸ்ஐ லதா வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்.
இதில் ஆண்டிப்பட்டி கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ் என்பவரின் மனைவி மணிமேலை பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.

வழக்கு
இதையடுத்து மணிமேகலையை பிடித்து விசாரணை செய்ததில் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையில் படித்த பட்டதாரி பெண் என்பதும் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதும் தெரியவந்தது. மணிமேகலை மீது வழக்குபதிவு செய்த போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ஏடிஎம்மிற்கு வருபவர்களை ஏமாற்றி பணத்தை கையாடல் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டவர் இந்த மணிமேகலை, ஏற்கனவே இவர் மீது உசிலம்பட்டியில் ஒரு வழக்கு உள்ளது என்றார்கள்.