கோடையில் பரபரத்த குற்றாலம்! கடைசி நேரத்தில் வேலி தாண்டிய ‘கருப்பு ஆடு’! திமுக ஆதரவுடன் அதிமுக வெற்றி
தென்காசி : யாரும் எதிர்பார்க்காத வகையில் குற்றாலத்தில் மூன்றாவது முறையாக நடைபெற்ற பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கணேஷ் தாமோதரன் திமுக உறுப்பினர் ஒருவரின் ஆதரவுடன் 5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது திமுகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதியன்று நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளை திமுக கைப்பற்றிய நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் மட்டும் இழுபறி நீடித்தது.
குளத்தில் பதுங்கிய ரவுடி! ட்ரோன் உதவியுடன் தட்டி தூக்கிய காவலர்கள்! கெத்து காட்டிய தென்காசி போலீஸ்

குற்றாலம் பேரூராட்சி
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் 8 வார்டுகள் உள்ளது. இதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தலா 4 வார்டுகளை கைப்பற்றியது. இதனால் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை யார் கைப்பற்றுவார்கள் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுக. கவுன்சிலர் மட்டுமே பங்கேற்றனர்.

மறைமுகத்தேர்தல் குழப்பம்
ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் திமுக கவுன்சிலர்கள் வரவில்லை. இதனால் மறைமுகத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மார்ச் 26ஆம் தேதி மறைமுகத்தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்போதும் திமுகவை சேர்ந்த 4 கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. தேர்தலுக்கு போதிய கவுன்சிலர்கள் வராததால் 2வது முறையாக மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்பு
இந்நிலையில் குற்றாலம் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் பிற்பகலில் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டிருந்தது. இதனிடையே இன்று நடைபெறும் தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பார்களா? தலைவர், துணைத்தலைவர் பதவிகளை யார் கைப்பற்றுவார்கள்? என பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதிமுக வெற்றி
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் குற்றாலத்தில் மூன்றாவது முறையாக நடைபெற்ற பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கணேஷ் தாமோதரன் 5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது திமுகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று நடைபெற்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் திமுகவை சேர்ந்த 4 உறுப்பினர்களும், அதிமுகவை சேர்ந்த 4 உறுப்பினர்களும் பங்கேற்ற நிலையில் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

திமுகவினர் அதிர்ச்சி
அப்போது அதிமுக சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கணேஷ் தாமோதரனுக்கு ஆதரவாக திமுக உறுப்பினர் ஒருவர் வாக்களித்ததால் 5 ஓட்டுக்களை பெற்று அதிமுகவை சேர்ந்த கணேஷ் தாமோதரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.