குற்றாலத்தில் கடும் வறட்சி.. அருவிகளில் தண்ணீர் இல்லை.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
குற்றாலம்: குற்றாலத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால் தண்ணீரின்றி வெறும் பாறைகளாக காட்சியளிப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனது. இதையடுத்து தென்மேற்கு பருவமழையால் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பியது. இந்த நிலையில் தமிழகத்துக்கு வர வேண்டிய புயல் ஒடிஸாவுக்கு திரும்பி விட்டதால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கடும் வெப்பம் நிலவி வருகிறது.

நீர்வரத்து இல்லை
இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் வெயில் கொடுமையிலிருந்து தப்ப ஒகேனக்கல், குற்றாலம் நீர் வீழ்ச்சிகளுக்கு செல்கின்றனர். ஆனால் கடும் வறட்சி காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஐந்தருவி, பழைய குற்றாலம் மெயின் அருவி, புலியருவி போன்ற அருவிகளில் முற்றிலும் நீர்வரத்து இல்லை.

தண்ணீர்
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெறும் பாறையாகவே காட்சி அளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ததால் சில நாட்களுக்கு முன்பு அருவிகளில் தண்ணீர் விழுந்தது.

ஏமாற்றம்
ஆனால் தற்போது முற்றிலும் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் அருவிகளில் நீரின்றி காட்சியளிக்கிறது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்து வரக் கூடிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வியாபாரிகள் கவலை
குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் இங்கு உள்ள வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் கவலை அடைந்துள்ளனர்.