கல்குவாரி விபத்து: இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உடல்.. மீட்பதில் தொய்வு
நெல்லை: நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் நடந்த விபத்தில் 300 அடி ஆழத்தில் இடிபாடுகளுக்குள் மேலும் ஒரு உடல் இருப்பது அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த 14 ஆம் தேதி இரவு பாறை சரிந்தது. அதில் 6 பேர் சிக்கிக் கொண்டனர். சுமார் 300 அடி ஆழ கல்குவாரியில் தொடர்ந்து பாறைகள் சரிந்து கொண்டே இருந்ததால் மீட்பதில் தொய்வு ஏற்பட்டது.

எனினும் ஏற்கெனவே 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் 5ஆவது நபரை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர்கள், காவல்துறையினர் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
நள்ளிரவு வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தொடர்ந்து மண்ணும் கற்களும் சரிந்து கொண்டே இருப்பதால் 5ஆவது நபர் உடல் கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மீட்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
4ஆவது நாளாக மீட்பு பணியில் ஈடுபட முயன்ற போது காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதால் மீட்பு பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் 6ஆவது நபரை தேட மோப்ப நாய் வரவழைக்கப்படடுள்ளது.
மழை குறைந்தவுடன் நாளை காலை 11.30 மணிக்கு மீட்பு பணிகள் தொடங்கி 5ஆவது நபரின் உடல் மீட்கப்படலாம் என தெரிகிறது. 6ஆவது நபரின் உடல் கிடக்கும் பகுதியைக் கண்டறியும் பணிகள் நடந்து வருகின்றன.