பா.ஜ.க நிர்வாகி மீது தாக்குதல்.. தி.மு.க எம்.பி ஞானதிரவியம், 2 மகன்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு!
திருநெல்வேலி: பா.ஜ.க நிர்வாகியை தாக்கியதாக தி.மு.க எம்.பி ஞானதிரவியம், அவரது மகன்கள் 2 பேர் உள்பட 30 பேர் மீது பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே காவல்கிணறு விலக்கில் ஹோட்டல் ஓன்றில் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன் என்பவர் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு திருநெல்வேலி தி.மு.க எம்.பி ஞானதிரவியம் மற்றும் ஆதரவாளர்கள் வந்தனர்.
பா.ஜ.க நிர்வாகியை தி.மு.க எம்.பி ஞானதிரவியம் தாக்கியதாக புகார்.. அண்ணாமலை கடும் கண்டனம்!

பா.ஜ.க நிர்வாகி மீது தாக்குதல்
ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரனை தாக்கியதாக கூறப்படுகிறது. ஹோட்டலில் இருந்த கேமராக்களையும் அவர்கள் அடித்து உடைத்து சென்று விட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதில் காயம் அடைந்த பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரனை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

அண்ணாமலை கண்டனம்
இதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன் மீது தி.மு.க எம்.பி ஞானதிரவியம் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்திய ஞானதிரவியம் மீது கடுமையான வழக்குப்பதிவு செய்து காவல்துறை சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீசார் வழக்குப்பதிவு
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களே இதுபோன்ற வன்முறை கலாசாரத்தை கையில் எடுப்பது தமிழத்தின் அமைதிக்கு மிக மிக ஆபத்தை விளைவிக்கும் என்பது உறுதி. ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், பாஜக கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்க வேண்டியதிருக்கும்' என்று அண்ணாமலை கூறி இருந்தார். இந்த நிலையில் பா.ஜ.க நிர்வாகியை தாக்கியதாக தி.மு.க எம்.பி ஞானதிரவியம் மீது பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எம்.பி ஞானதிரவியம், அவரது மகன்கள்
தி.மு.க எம்.பி ஞானதிரவியம், அவரது மகன்கள் ராஜா, தினகரன், ஜெபகுமார் என்பவரது மகன் நவீன் உள்ளிட்ட 30 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 147( கலவரத்தை தூண்டுதல்), 294(b) அவதூறாக பேசுதல், 323(காயம் ஏற்படுத்துதல்), 506(2) ஆயுதத்துடன் கொலை மிரட்டல்.உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.