தென்னகத்தின் ஸ்பா...குற்றால அருவியிலே குளிச்சது போல் இருக்குமா.. நீராடுவது ஏன் அவசியம் தெரியுமா?
குற்றாலம்: சில்லென்று வீசும் காற்று... மிதமான வெயில்... இதமாக தூரும் சாரல் என குற்றாலத்தை நினைக்கும் போதே மனமும் உடலும் குதூகலமாகும். அருவிகளில் தலையை காட்டி குளித்தாலே உடம்பெல்லாம் இயற்கையாக மசாஜ் செய்யப்பட்டு விடும். அதனால்தான் குற்றால அருவிகளை தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கின்றனர்.
குற்றாலம் இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசமாக விளங்குகிறது. இந்த பகுதியில் ஏராளமான அற்புதமான நீர்வீழ்ச்சிகள் அமையப்பெற்றுள்ளன. குற்றாலம் அருவிகளின் தண்ணீர், மலையில் நிறைந்திருக்கும் பல அற்புத மூலிகைகள் காரணமாக மருத்துவ பண்புகள் நிறைந்து விளங்குகிறது.
கேரளாவில், தென்மேற்கு பருவமழை துவங்கும் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை தகுந்த பருவ கால சூழ்நிலை நிலவுகிறது. இந்த காலத்தில் இந்த மலைப்பகுதியில் பெய்யும் அதிக மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து பாயும்.
ஐப்பசி விசு: குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை

குற்றால மலை அழகு
புராண காலத்தில் பிதுர் கண்டம் தீர்த்த புரம், சிவத்துரோகம் தீர்த்த புரம், வசந்தப் பேரூர், முதுகங்கை வந்த புரம், செண்பகாரணிய க்ஷேத்ரம், நன்னகரம், வேடன் வலஞ்செய்த புரம், யானை பூசித்த புரம், சிவ முகுந்த பிரம புரம், திரிகூடபுரம், முனிக்கு உருகும் பேரூர் என்றெல்லாம் குற்றாலம் சிறப்பித்து அழைக்கப்பட்டுள்ளது. குற்றால மலையானது பல தமிழ் இலக்கியங்களில் சிறப்பித்து பேசப்பட்டாலும், இந்த மலையின் பெயரில் எழுதப்பட்ட இலக்கியமான "குற்றால குறவஞ்சி" நூலில் சிறப்பாக கூறப்பட்டுள்ளது.

எத்தனை எத்தனை அருவிகள்
குற்றாலம் சிறந்த சுற்றுலா ஸ்தலமாக விளங்குவதற்கு காரணம் இங்குள்ள பேரருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி, தேனருவி, பாலருவி, செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகள் ஆகும். இவைகள் ஒவ்வொன்றும் இந்தக் குற்றாலம் மலையைச் சுற்றி அருகருகே அமைந்துள்ளன. இதுதவிர இந்தக் குற்றாலத்திற்கு அருகே இருக்கும் அடவிநயினார் அணைக்கட்டு, குண்டாறு அருவி மற்றும் அணைக்கட்டு, தோரணமலை, ராமநதி அணைக்கட்டு, அத்திரி மலை, கடனா நதி அணைக்கட்டு, பொதிகை மலை, அகத்தியர் அருவி, பாபநாசம் அணைக்கட்டு, சேர்வலாறு அணைக்கட்டு, மணிமுத்தாறு அருவி மற்றும் அணைக்கட்டு, மாஞ்சோலை மலை வாசஸ்தலம் என சுற்றிப்பார்க்க பல இடங்களும் உள்ளன.

மருத்துவ குணம் கொண்ட அருவிகள்
இந்த நீர்விழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரும் பகுதியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிரம்பிய மூலிகைகள் நிறைந்து காணப்படுவதால், இந்த நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் மருத்துவ குணங்களுடன் திகழ்கிறது. இதனால் இந்த அருவிகளில் நீராடும் சுற்றுலா பயணிகளின் உள்ளமும், உடலும் புத்துணர்ச்சி பெற்று ஆரோக்கியமாகத் திகழ்கிறது. பல நோய்களுக்கு மருந்தாக குற்றால அருவிக்குளியல் விளங்குகிறது. ஒருமுறை குளித்த பின்னரும் மீண்டும் மீண்டும் குளிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் அருவிக்குளியல்.

ஆன்மீக தலங்கள் அதிகம்
குற்றாலம் சிறந்த ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்கு பேரருவிக்கரையில் அமையப்பெற்றுள்ள திருக்குற்றாலநாதர் திருக்கோவில் சைவ சமயத்தின் முக்கியமான பழம்பெரும் கோவிலாக விளங்குகிறது. சிவபெருமான் திருநடனம் புரிந்த பஞ்ச சபைகளில் குற்றாலம் சித்திர சபையை தன்னகத்தே கொண்டுள்ளது. சைவ சமயத்தை சார்ந்த அருளாளர்கள் இந்த குற்றாலம் தளம் மீது பல தேவார பாடல்களை பாடியுள்ளனர். இந்த குற்றாலம் திருக்கோவில் மலை மேலிருந்து பார்க்கும் பொது சங்கு வடிவத்தில் அமையப்பெற்றுள்ளதை நாம் காணலாம். எனவே குற்றாலம் எப்போதும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி காணப்படும் என்பதில் குறையொன்றும் இல்லை. இந்தக் குற்றாலம் நகரை சுற்றி குற்றாலநாதர் கோவில் தவிர இலஞ்சி குமாரர் கோவில், பண்பொழி திருமலைக்கோவில், புளியரை சிவன் கோவில், செங்கோட்டை சிவன் கோவில், பண்பொழி நகரீஸ்வரமுடையார் கோவில், தென்காசி விஸ்வநாதர் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், சிவசைலம் சிவன் கோவில், கட்டாயம் சிவன் கோவில் மற்றும் கேரளா மாநில எல்லையில் உள்ள அச்சன்கோவில் ஐயப்பன் கோவில் , ஆரியங்காவு சாஸ்தா கோவில் போன்ற பிரபலமான ஆன்மீக ஸ்தலங்களும் அமையப்பெற்றுள்ளன.

சுடச்சுட சாப்பிடலாம்
பிரதான அருவிக்கரையில் கடை வீதிகள் ஏராளமாக இருக்கும். சுடச்சுட நேந்திரங்காய் சிப்ஸ் வாசனை சுண்டி இழுக்கும். திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என சூடாக சுவையாக விற்பனை செய்யும் கடைகளும் இங்கு ஏராளமாக உள்ளன. அருவியில் குளித்து முடித்து திரும்பும் சுற்றுலா பயணிகள் சூடாக மிளகாய் பஜ்ஜியோடு, உளுந்த வடை, பருப்பு வடை, கார வடை, உள்ளி போண்டா சாப்பிட்டு விட்டு பாதம் பால், தேயிலை, காபி, சுக்கு காபி குடித்து மகிழலாம்.

சின்னதாக ஒரு ஷாப்பிங்
குளித்து முடித்த களைப்பு நீங்கிய உடன் ஜாலியாக ஷாப்பிங் போக கடைகள் ஏராளமாக உள்ளன.
குற்றாலம் மலைப்பகுதியில் பல்வேறு மருத்துவ குணங்கள் வாய்ந்த பழங்கள் இயற்கையாக விளைகின்றன அந்த பழங்களை வாங்கிச் செல்லலாம். ஐந்தருவி அருகில் உள்ள பழத்தோட்ட பகுதியில் பல வகையான பழங்கள் விளைவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விளையும் பழங்களுள் துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், முட்டை பழம். ஸ்டார் புரூட், மா, பலா, வாழை, கொய்யா, பன்னீர் கொய்யா, சப்போட்டா, பேரிக்காய், வால்பேரி, பப்பாளி, பேரீச்சை, நாவல், திராட்சை, ஆப்பிள், பிளம்ஸ், காட்டு ஆரஞ்சு, மாதுளை, நெல்லிக்காய் ஆகியவை இயற்கை சுவையுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழங்களை விற்பனை செய்ய ஐந்தருவி பகுதியிலும், பெரிய அருவி பகுதியிலும் நிறைய பழக்கடைகள் உள்ளன. இவை தவிர மலையில் விளைந்த மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் இங்கு உள்ளன. மலையில் விளைந்த நறுமண பொருட்களான ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு, ஜாதிபத்திரி, லவங்கம். மாசிக்காய் போன்றவைகள் நறுமணம் கமழ விற்பனை செய்யப்படுகின்றன.

சைவம், அசைவ உணவுகள்
குற்றாலத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் தாங்களாவே சைவ, அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். சிலரோ சுடச்சுட நாட்டுகோழி குழம்புடன் பரோட்டா சாப்பிடுவார்கள். பிரியாணி, நாட்டுக்கோழி சாப்ஸ் என சுவைத்து வருவார்கள். குற்றாலத்தில் குளித்து மகிழ ஒரு நாள் போதாது... 3 நாட்கள் தங்கி குளித்தால் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும். இப்பவே குற்றாலம் போகலாம் போல ஆசையா இருக்கா... சீசன் ஆரம்பிக்கப்போகுது சீக்கிரம் டிக்கெட் புக் பண்ணுங்க மக்களே. மதுரையில் இருந்து பேருந்து, ரயில் மூலம் குற்றாலம் போகலாம். அருகில் உள்ள நகரங்கள் தென்காசி, செங்கோட்டை. அங்கிருந்து 10 நிமிட தூரத்தில் குற்றாலம் உள்ளது.