கூகுள் மேப்பை பார்த்து.. எங்கே போய் லாரியை விட்டார் தெரியுமா இந்த டிரைவர்.. நெல்லையில் பரபரப்பு
திருநெல்வேலி: நெல்லையில் கூகுள் மேப்பை பார்த்து வாகனம் ஓட்டிய சரக்கு லாரி ஓட்டுனர் லாரியை நெல்லையப்பர் கோவில் மண்டபத்தில் சிக்க வைத்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
உலகளவில் இணைய சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் மேப் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் வாகன பயணம் மேற்கொள்ளும் மக்கள் தங்கள் செல்லவேண்டிய இடத்திற்கான பகுதியை குறிப்பிட்டால் போதும் கூகுள் மேப் பாதையை துல்லியமாக கணிக்கும். மேலும் எங்கெங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளது எங்கெங்கு வேகமாக செல்லலாம் உள்ளிட்ட வசதிகளையும் கூகுள் மேப் வழங்குகிறது.

இதனால் இதுவரை செல்லாத பகுதிகளுக்குக் கூட யாரும் உதவி கேட்காமலேயே எங்கு வேண்டுமானாலும் சென்று வந்துவிடலாம். மேலும் அந்த வழியில் உள்ள பெட்ரோல் பங்குகள் உணவகங்கள் உள்ளிட்ட வசதிகளையும் கூகுள் மேப் தங்கள் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது.
அதே நேரத்தில் சில குறைபாடுகளும் கூகுள் மேப்பில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கூகுள் மேப் வசதியுடன் காரை இயக்கிய ஓட்டுனர் செய்ய முயன்றபோது அங்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. தற்போது அப்படியான ஒரு சம்பவம் மீண்டும் தமிழ் நாட்டில் நடந்துள்ளது.
சென்னையில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஓட்டுனர் ஒருவர் நெல்லை நோக்கி சென்றுள்ளார். நெல்லையப்பர் கோயில் அருகே சரக்குகளை இறக்க வேண்டிய நிலையில் கூகுள் மேப்பை பார்த்து கொண்டு வாகனத்தை இயக்கி உள்ளார் அந்த ஓட்டுநர் அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் தடை செய்திருந்த நிலையில் கூகுள் மேப்பை பார்த்து கொண்டே வாகனத்தை இயக்கியபோது நெல்லையப்பர் கோயில் மண்டபத்தின் வாயிலில் லாரி சிக்கிக் கொண்டது.
பொதுமக்கள் அந்தப் பகுதியில் லாரியை இயக்கக் கூடாது எனக் கூறியும் கூகுள் மேப்பை பார்த்து இயக்கியதால் லாரி சிக்கிக் கொண்டது. இதையடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லாரி மண்டபத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டது இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.