மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு.. அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்
நெல்லை: நாடு முழுவதும் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் குற்றாலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது.
இதனையடுத்து நெல்லை மற்றும் குமரி மாவட்ட அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. கோடை விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கன மழை மற்றும் தற்போது பெய்யும் மழையால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து காணப்படுகிறது. இதனால் ஐந்தருவி, பழைய குற்றாலம் மற்றும் மெயின் அருவி பகுதிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்- கோமதி மாரிமுத்து
இதே போல கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதனால் திற்பரப்பு அருவியிலும் சுற்றுலாப்பயணிகள் இன்று குவிந்துள்ளனர், திற்பரப்பு அருவியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்து வந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் நீச்சல் குளம், சிறுவர் பூங்கா, படகு சவாரி உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. மழை காரணமாக தமிழக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.