'யாரும் பணம் தரல.. அதனால யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை..' வாக்குச்சீட்டில் எழுதி வைத்த நபர்
திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் வாக்காளர் ஒருவர், "எந்த வேட்பாளரும் ரூ.500 பணம் தராததால் எனக்கு வாக்களிக்க விருப்பமில்லை' என்று எழுதி, அதை வாக்கு பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார். இது வாக்கு எண்ணும் மையத்தில் சற்று சலசலப்பை உண்டாக்கியது.
தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய தேர்தல் உச்ச நீதிமன்ற கண்டிப்பிற்குப் பிறகு 3 ஆண்டுகள் தாமதமாக 2019இல் நடத்தப்பட்டது.
புலி வருகிறது கூடலூர் நோக்கி.. 8 நாட்களுக்கு பிறகு.. கேமராவில் பதிவானது.. கிராம மக்களுக்கு வார்னிங்
அப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

உள்ளாட்சித் தேர்தல்
இந்தச் சூழலில் விடுபட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 12 காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

திமுக வெற்றி
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான இடங்களை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே முன்னிலையில் உள்ளன. அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் மிக மோசமான தோல்வியையே சந்தித்துள்ளன. மாநிலத்தில் பெரும்பாலும் அமைதியான முறையிலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆங்காங்கே சில இடங்களில் கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டாலும்கூட, அவை பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சினையாக மாறவில்லை.

ஒரு வாக்கு
வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு சுவாரசிய சம்பவங்களும் அரங்கேறின. பல்வேறு இடங்களில் வெறும் ஒரு வாக்கு வெற்றி தோல்வியைத் தீர்மானித்தது. சில இடங்களில் இரண்டு வேட்பாளர்கள் சமமான வாக்குகளைப் பெற்றதால் குலுக்கல் முறையிலும் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டார். மற்றொரு சுவாரசிய நிகழ்வாகக் கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டுக்கு இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட பாஜகவின் கார்த்திக் என்பவர் வெறும் ஒரு வாக்கை மட்டுமே பெற்றிருந்தார்.

பணம் தரவில்லை, வாக்களிக்க விருப்பமில்லை
இந்தச் சூழலில் நெல்லை பாளையங்கோட்டை ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் வாக்காளர் ஒருவர் வாக்குச்சீட்டில் எழுதிய வாசகம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வாக்காளர் தனது வாக்குச்சீட்டில், "எந்த வேட்பாளரும் ரூ.500 பணம் தராததால் எனக்கு வாக்களிக்க விருப்பமில்லை' என்று எழுதி, அதை வாக்கு பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார். இதைக் கண்டதும் வாக்கு எண்ணும் முகவர் விரக்தியின் உச்சத்திற்குச் சென்றுவிட்டார். இதையடுத்து வாக்குச்சீட்டில் எழுதி இருப்பதால் அந்த வாக்கு செல்லாததாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.