ஊருக்கு நடுவே ஒரு கொலை.. சமுதாய கூடத்தில் தலை.. நெல்லை அருகே பரபரப்பு
நெல்லை: இளைஞர் ஒருவரின் தலை மட்டும் துண்டாகி தனியாக கிடப்பதை பார்த்து பொதுமக்கள் தலைதெறிக்க ஓடிய சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.
மேலப்பாளையம் அருகே உள்ள ஊர் வீரமாணிக்கபுரம். இங்கு வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி மேலப்பாலாமடை என்ற ஊரை சேர்ந்தவர். இவர்களுக்கு 18 வயதில் பால்துரை என்ற மகன் உள்ளார்.
பால்துரைக்கு வேலை வெட்டி எதுவும் கிடையாது. அதனால் ஊரை சுற்றி வருவதே இவருக்கு பிழைப்பாக இருந்துள்ளது. அடிக்கடி தன் அம்மா வீட்டுக்கும் போய் வருவார்.

கூடத்தில் தலை
அப்படித்தான் மேலப்பாலமடைக்கு சென்றிருந்தார் பால்துரை. இந்நிலையில் இன்று காலை அந்த ஊருக்கு நடுவில் உள்ள சமுதாயக்கூடத்தில் ஒரு தலை மட்டும் துண்டித்து வைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் பார்த்து அலறி அடித்துகொண்டு ஓடினார்கள். இது சம்பந்தமாக சீவலப்பேரி போலீசுக்கு தகவல் பறந்தது.

பால்துரைதான்
அதனடிப்படையில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், தலை துண்டிக்கப்பட்டவர், பால்துரைதான் என தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

கதறி அழுத தாய்
பால்துரையின் தாயாரும் மகனின் தலையை கண்டு கதறி துடித்து அழுதார். இதையடுத்து பால்துரைதான் இறந்தது என்பதை உறுதி செய்த போலீசார், இது சம்பந்தமான விசாரணையை துவங்கி உள்ளனர்.

உடல் எங்கே?
பால்துரையை கொலை செய்தது யார்? எதற்காக தலையை துண்டித்து ஊருக்கு நடுவே போட்டு விட்டு போயிருக்கிறார்கள்? என்பது குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். அத்துடன், பால்துரையின் தலையை மட்டும் வைத்து கொண்டு, அவரது உடல் எங்கே இருக்கிறது என தேடி வருகிறார்கள்.