இனி ஒரே தலைமைதான்.. அதிமுகவை காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது: "புரட்சி பயணத்தில்" சசிகலா பேட்டி
திருவள்ளூர்: வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுக ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் வரும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில், தமிழகம் முழுவதும் புரட்சிப் பயணம் மேற்கொண்டு தொண்டர்களைச் சந்திக்க இருப்பதாக சசிகலா அறிவித்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது எம்ஜிஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மகத்தான பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் என சசிகலா கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று முதற்கட்ட சுற்றுப்பயணத்தை சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து தொடங்கினார். அதிமுக கட்சிக் கொடி கட்டிய பிரச்சார வாகனத்தில் சசிகலா பயணத்தை தொடங்கினார். சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி பைபாஸ் வந்த சசிகலா, அப்படியே திருத்தணி, குண்டலூர் பகுதிகளில் தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில், தொண்டர்களை சந்திப்பதற்காக திருத்தணி வந்துள்ள சசிகலா அங்குள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று சுற்றுப்பயணத்தின் போது எல்லோரும் கருத்து கூறுகிறார்கள். அதனால் நிச்சயம் மீண்டும் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வருவேன். அது மக்களின் ஆட்சியாக இருக்கும். எம்ஜிஆர் மறைவுக்கு பின் இதேபோன்ற சூழல் ஏற்பட்டது. அதனை என் சிறுவயதிலேயே பார்த்து வந்துள்ளேன். அதேபோல் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.
இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னையையும் என்னால் சரி செய்ய இயலும். எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் நினைக்கிறார்கள். மக்களும் என்னுடன் இருக்கிறார்கள். நான் பொதுச்செயலாளர் இல்லை என்று நிராகரிப்பது, கஷ்டமாக தான் இருக்கிறது. ஆனால் இதனை என்னால் சரி செய்ய முடியும். அதிமுகவை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அதிமுகவுக்குள் இருக்கும் பிரச்னைகளை நாங்கள் சரிசெய்துகொள்வோம்.
தொண்டர்களின் வரவேற்பு அபாரமாக உள்ளது. என் தலைமையை தொண்டர்கள் விரும்புகிறார்கள். அப்படி இருந்தால் அதிமுக நன்றாக இருக்கும்.மற்ற மாவட்டங்களிலும் எனது சுற்றுப்பயணம் தொடரும். தமிழ்நாட்டில் தலைவர்களுக்கான வெற்றிடம் இல்லை. அது மற்ற கட்சியினர் வளர்வதற்காக கூறும் கருத்து.
அண்ணா இருந்தபோது திமுக உயிர் எம்ஜிஆர் தான். அண்ணாவின் மறைவுக்கு பின் எம்ஜிஆர் தொடங்கியது தான் அதிமுக. எனது பயணம் வெற்றிகரமாக முடியும். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ஒரு தலைமையின் கீழ் அதிமுக நிச்சயம் வரும் என்று தெரிவித்தார்.