தங்கக் கடத்தல் ஸ்வப்னா பத்தாம் வகுப்பு கூட படிக்கலையாமே அப்புறம் எப்படி அதிகாரி பதவி?
திருவனந்தபுரம்: ஸ்வப்னா சுரேஷ் பத்தாம் வகுப்பு கூட படிக்கவில்லை அவரோடு நான் பேசியே சில வருடங்கள் ஆகி விட்டது அவர் எப்படி அரசுத்துறையிலும்,துணை தூதரகத்திலும் வேலைக்கு சேர்ந்தார் என்றே தெரியவில்லை என்று கேட்கிறார் கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கி தற்போது தலைமறைவாகியுள்ள பெண்ணின் அண்ணன் பிரைட் சுரேஷ்.
கேரளா அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது தங்கக்கடத்தல் வழக்கு. கடந்த ஜூலை 4 ஆம் தேதி, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்துக்கு உணவுப்பொருள் என்ற பெயரில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் யு.ஏ.இ தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஜரித் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில் இயங்கும் தகவல் தொழில் நுட்ப பிரிவில் அதிகாரியாக வேலை செய்யும் ஸ்வப்னா சிக்கியதுதான் எதிர்கட்சியினருக்கு சாதகமாக போய்விட்டது. முதல்வரின் செயலாளரும் ஐடி துறை செயலாளராகவும் இருக்கும் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சிவசங்கர் அடிக்கடி ஸ்வப்னாவின் வீட்டிற்கு சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. ஸ்வப்னாவின் ஒப்பந்த பணி முடிந்தும் அதே பணியில் நீட்டிக்கப்பட்டுள்ளார். ஸ்வப்னா சுரேஷ் இதே போல பத்து முறை தங்கத்தை கடத்தியுள்ளாராம்.
தங்க கடத்தல் வழக்கு.. தமிழகத்தில் பதுங்கியுள்ளாரா ஸ்வப்னா சுரேஷ்?.. முன்ஜாமீனுக்கும் பக்கா பிளானாம்!

ஐஏஎஸ் அதிகாரிக்கு சிக்கல்
தங்க கடத்தலில் சிக்கிய ஊழியரை காப்பாற்ற முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் சிவசங்கர் அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு தகவல் தொழில் நுட்ப பிரிவின் செயலாளர் பதவியில் மட்டுமே நீடிக்கிறார்.

பத்தாம் வகுப்பு முடிக்கலையே
இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் ஸ்வப்னாவின் அண்ணன் பிரைட் சுரேஷ், தனது தங்கையின் கல்வித்தகுதி பற்றி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். ஸ்வப்னா பத்தாம் வகுப்பை கூட முடித்திருக்கவில்லை என்று கூறியுள்ள பிரைட் சுரேஷ், அவர் மேல்நிலைக்கல்வியை முடித்திருப்பார் என்று தன்னால் உறுதியாக கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமீரக துணை தூதரகத்தில் வேலை
கடந்த சில ஆண்டுகளாகவே தனது தங்கையுடன் தான் பேசுவதில்லை, அவர் வீட்டிற்கு போவதில்லை என்று கூறியுள்ள பிரைட், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த போது ஐக்கிய அமீரக துணை தூதரகத்தில் வேலை செய்வதாக ஸ்வப்னா கூறியதாக தெரிவித்தார். அதன் பிறகு தனது தங்கையுடன் பேச்சுவார்த்தை எதுவும் கிடையாது என்றும் கூறியுள்ளார் பிரைட் சுரேஷ்.

தலைமைச் செயலகத்தில் வேலை
ஸ்வப்னாவின் அண்ணன் கூறிய தகவல், தங்கக் கடத்தலை விட அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. ஸ்வப்னா கேரள தலைமைச் செயலகத்தில் ஐ.டி துறை ஆபரேஷனல் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கேரள அரசின் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஸ்வப்னா தங்க கடத்தல் வழக்கில் சிக்கியிருக்கிறார். தனது தங்கைக்கு தங்கக்கடத்தலில் தொடர்பு இருப்பதாக கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.

தலைமறைவு ஸ்வப்னா
கடந்த சில நாட்களாக செய்திகளில் பரபரப்பாக இடம் பெற்று வரும் ஸ்வப்னா தமிழ்நாட்டில் தலைமறைவாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலராமபுரம் வழியாக ஸ்வப்னா தமிழகம் வந்தாகவும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளன. இதனைத்தொடர்ந்து ஸ்வப்னாவை தேடி அதிகாரிகள் தமிழகம் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டே ஸ்வப்னா, திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.