இளம்பெண் கடத்தல் சர்ச்சையில் நித்தியானந்தா ஆசிரமம்- திருவண்ணாமலை ஆசிரமத்தில் போலீசார் தீவிர தேடுதல்!
திருவண்ணாமலை: கர்நாடகாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் திருவண்ணாமலையில் உள்ள சர்ச்சை சாமியார் நித்தியானந்தா ஆசிரமத்தில் போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் ஆர்.ஆர். நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஸ்ரீநாகேஷ் மற்றும் அவரது மனைவி ஓய்வு பெற்ற பேராசிரியர் மாலா ஆகியோரது மூத்த மகள் வைஷ்ணவி(24); இளைய மகள் வர்தினி(22). இவர்கள் அனைவருமே கடந்த பல ஆண்டுகளாக நித்யானந்தாவின் சீடர்களாக இருந்து கர்நாடகாவின் பிடதி ஆசிரமத்தில் பல்வேறு பணிகளை செய்து வந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் ஸ்ரீநாகேஷ் அவரது மனைவி மாலா மற்றும் மூத்த மகள் வைஷ்ணவி ஆகியோர் ஆசிரமத்தில் இருந்து வெளியேறினர். இவர்களது இளைய மகள் வர்தினி மட்டும் ஆசிரமத்திலேயே தங்கி தொடர்ந்து நித்யானந்தாவின் சீடராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கொரோனா காலத்தில் தனது மகளை பார்க்க ஆசிரம நிர்வாகிகள் அனுமதிக்காத நிலையில் செய்வதறியாமல் இரண்டு ஆண்டுகளாக தவித்து வந்த ஸ்ரீநாகேஷ் குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தனர். அதன் அடிப்படையில் கர்நாடக காவல் துறையினர் பிடதி ஆசிரமத்தில் தேடியபோது அவரது மகள் வர்தினி அங்கு இல்லை என்று கூறப்பட்டது.
கைலாசாவில் திடீரென சிலைகளை வைத்து பூஜை! பார்க்க நித்தியானந்தா மாதிரி இருக்கே.. பதற்றத்தில் பக்தர்கள்
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீநாகேஷ் குடும்பத்தினர் தனது மகள் திருவண்ணாமலைக்கு கடத்தப்பட்டு இருப்பாரோ? என்று கருதி இன்று திருவண்ணாமலை நித்தியானந்தா ஆசிரமத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களை ஆசிரம நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்காமல் அலைகழித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீ நாகேஷ் குடும்பத்தினர் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவல் ஆய்வாளர் ஹேமமாலினி தலைமையில் போலீசார் நேற்று இரவு நித்தியானந்தா ஆசிரமத்துக்குள் நுழைந்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நித்தியானந்தா ஆசிரமத்துக்குள் காவல்துறையினர் நுழைந்ததை அறிந்த கிரிவலம் சென்ற பக்தர்கள் அங்கு குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடத்திய தேடுதலில் வர்தினி திருவண்ணாமலையிலும் இல்லை என அறிந்த ஸ்ரீ நாகேஷ் குடும்பத்தினர் மிகுந்த சோகத்துடன் ஆசிரமத்தை விட்டு வெளியேறி காரில் புறப்பட்டு சென்றனர்.