எடப்பாடி தலைமையில் தான் அதிமுக.. மற்றதெல்லாம் புழு.. ‘இரட்டை இலையில் போட்டி’ : சீறிய மாஜி அமைச்சர்!
திருவண்ணாமலை : எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அணி தான் உண்மையான அதிமுக என்றும், மற்றவை எல்லாம் குழுவாகவும் புழுவாகவும் தான் உள்ளன என்றும் முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நிலையில், அதிமுக கூட்டணியில் இரு அணிகள் களமிறங்குகின்றன.
எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், வேட்பாளரை களமிறக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.
எடப்பாடியா? ஓபிஎஸ்ஸா? ஈரோடு கிழக்கில் பாஜக ஆதரவு எந்த அணிக்கு.. அவங்களுக்குத்தான் அதிக சான்சாமே?

இடைத்தேர்தல் களம்
ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைதேர்த்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். 11 அமைச்சர்களை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை திமுக அமைத்துள்ளது.

ஈபிஎஸ், ஓபிஎஸ் போட்டி
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை தமாகா ஏற்கனவே போட்டியிட்ட தொகுதி என்பதால் தமாகா போட்டியிடக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிட விரும்பியதால், தமாகாவும் அதனை ஏற்றுக் கொண்டது. அதிமுக ஓபிஎஸ் அணியும் நிச்சயமாக போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளது. முன்னதாக, பாஜக போட்டியிட்டால் ஆதரிப்போம் என்றும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இதனால், அதிமுக சார்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

வைகைச்செல்வன்
அதிமுக சாபில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு அணிகளும் களமிறங்குவதால், இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஈபிஎஸ் அணி தான் உண்மையான அதிமுக, மற்றதெல்லாம் புழு என முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணா சிலை அருகில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் பங்கேற்றார்.

மற்றவை புழு
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன், "எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அணி தான் உண்மையான அதிமுக. மற்றவை எல்லாம் குழுவாகவும் புழுவாகவும்தான் உள்ளன. அதிமுக தலைமையில் தான் தேர்தல் களத்தை சந்திக்கிறோம். ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி அதிமுக அணி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்.

இன்னும் 1 வாரத்தில்
இன்னும் 1 வார காலத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிச்சயமாக எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வரும். ஓபிஎஸ் பாஜகவுக்கு ஆதரவு தருவது என்பது கற்பனையானது. அதிமுக தலைமையில் தான் பாஜக மற்றும் ஏனைய கட்சிகள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டது. தலைமை பொறுப்பில் உள்ள கட்சி அதிமுக. கூட்டணி கட்சிகளை அரவணைத்து துணையாக தேர்தல் களத்தில் அதிமுக போட்டியிடும்" எனத் தெரிவித்தார்.