• search
திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

செஞ்சி அருகே 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொற்றவை, பிள்ளையார் சிற்பம் கண்டெடுப்பு!

Google Oneindia Tamil News

செஞ்சி: செஞ்சி அருகே வீரணாமுர் கிராமத்தில் 1300 ஆண்டுகள் பழமையான கொற்றவை மற்றும் பிள்ளையார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் , உதயராஜா மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்ட எல்லையை ஒட்டிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது வீரணாமுர் கிராமத்தில் கற்சிலை ஒன்று இருப்பதாக வந்த தகவலின் பேரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர்.

செஞ்சி வட்டத்துக்குட்பட்ட வீரணாமுர் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலின் பின்புறம் பலகை கல்லினாலான ஒரு சிற்பம் இருப்பதாகப் பள்ளி மாணவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து அதனை ஆய்வு மேற்கொண்டனர்.

Kotravai and Vinayagar statue found in Gingee

சுமார் 5 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பலகை கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாக இருப்பது கொற்றவை சிலை என்பது கண்டறியப்பட்டது. தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்க , வட்ட முகத்தில் கூர்மையான கண்களும் தடுத்த உதடுகளுடன் , இருகாதுகளில் பத்ர குண்டலங்குடன் காட்சி தருகிறது. கழுத்தில் ஆரம் போன்ற அணிகலன்களையும் , அனைத்து கைகளிலும் கைவளைகளும் அணிந்து இடை ஆடை தொடைவரை அணிந்தும் நிமிர்ந்து கம்பீரமாக எருமை தலையின் மீது நின்றவாரு காட்சி தருகிறது. தனது மேல் வலது கரத்தில் பிரயோக சக்கரமும் முறையே மற்ற வலது கரங்களில் வாள் மற்றும் மணியை ஏந்தியபடி மற்றொரு கை அருள்பாலிக்கும் அபய முத்திரையில் உள்ளது. மேல் இடது கரம் சங்கு தாங்கியும் முறையே மற்ற கைகள் வில் , கேடயமும் ஏந்தி கீழ் இடது கரம் இடையின் மீது கடி முத்திரையிலும் காட்சி தருகிறது.

கொற்றவையின் வாகனங்களான சிம்மமும் , கலைமானும் தலையருகே காட்சி படுத்தப்பட்டுள்ள நிலையில் காலருகே இருபுறமும் வீரர்களும் காட்சி தருகின்றனர். அணிகலன்கள் மற்றும் சிற்ப அமைதியை வைத்து இது 7 ம் நூற்றாண்டின் கடைபகுதி அல்லது 8ம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பமாகக் கருதலாம்.

Kotravai and Vinayagar statue found in Gingee

மேலும் அவ்வூரில் பாழடைந்த செங்கல் கோவில் ஒன்றில் இதே போன்ற பலகை கல்லினால் ஆனால் சிற்பம் இருப்பதாக தெரிவித்தனர். அரசுப் பள்ளிக்கு அருகாமையிலே அகஸ்தீஸ்வரர் கோவில் என்ற பெயரில் வழங்கப்படும் சிதிலமடைந்த அக்கோவில் வாசலின் இடதுபுறம் சுமார் 5 அடியிலான பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக பிள்ளையார் சிற்பம் ஒன்று காணக்கிடைக்கிறது. நான்கு கரங்களுடன் பத்மாசன கோலத்தில் அமர்ந்தவாரு காட்சி தருகிறார். உள்ளூர் கலைபாணியில் அமைந்துள்ள இச்சிற்பம் கால ஓட்டத்தால் மிகவும் தேய்ந்துள்ளதால் கையில் உள்ள ஆயுதங்கள் தெளிவாகத் தெரியவில்லை. இச்சிற்பமைப்பை வைத்து இதன் காலம் கி.பி 7ம் நூற்றாண்டாக இதனை கருதலாம்.

மேலும் இக்கோயிலில் ஆறு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இரண்டாம் ராஜாதிராஜனின் 5 ம் ஆட்சி ஆண்டு கல்வெட்டொன்றும் , மூன்றாம் குலோத்துங்க சோழனின் பதினோராம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு இரண்டும் , சோபானம் கொடை தந்த கல்வெட்டொன்றும் , நிலைக்கால் தானம் தந்த இரு கல்வெட்டும் காணக்கிடைக்கிறது.

ராஜாதிராஜனின் ஐந்தாம் ஆட்சியாண்டு கல்வெட்டு இவ்வூரை பண்டிதசோழநல்லூரான வீரணாமுர் என்றும் குலோத்துங்க சோழனின் பதினோராம் ஆட்சியாண்டு கல்வெட்டு இறைவன் பெயர் திருவகதீஸ்வரமுடையார் என்றும் குறிப்பிடுகிறது. மேலும் குலோத்துங்க சோழனின் இரண்டு கல்வெட்டும் இக்கோயிலில் சந்தி விளக்கெறிக்க தானம் தந்துள்ள செய்தியைத் தருகிறது. இவையாவும் மத்திய தொல்லியல் துறையால் பார்வையிடப்பட்டு 1937 ம் வருட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்வூரில் ஒரு வீட்டின் பின்புறம் பெண் சிலை ஒன்று இருப்பதாக மாணவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து அதனை ஆய்வு மேற்கொண்டோம். நான்கு கரங்களில் மேல் இரு கரங்கள் சங்கு சக்கரம் தாங்கியும் , கீழ் வலது கரம் அபய முத்திரையில் கீழ் இடது கரம் இடை மீது கடக முத்திரையிலும் இடை ஆடையுடன் காட்சி தரும் இந்த சிற்பம் 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவர் காலத்திய விஷ்ணு சிற்பமாகும். இதனை மக்கள் பெண் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஊரில் சிவன் கோயில் இன்று வழிபாடின்றி , சிதைவின் பாதையில் உள்ளது. ஊரில் உள்ள இளைஞர்கள் அவ்வப்பொழுது இதனைச் சுத்தம் செய்து வருகின்றனர். ஊர் மக்கள் ஒன்று கூடி இக்கோயிலை முறையாக புனரமைத்து , வழிபாடுகள் தங்குதடையின்றி நடத்திட வேண்டும். மேலும் வெயிலுக்கும் மழைக்கும் நனைந்து கொண்டிருக்கும் கொற்றவை சிற்பத்தையும் கொட்டகை அமைத்து முறையாகப் பராமரித்து வழிபாடு செய்திட வேண்டும்.

English summary
Kotravai and Vinayagar statue found in Veeranamoor village near Gingee which is 1300 years old.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X