முகூர்த்த நேரம் முடியப் போகுது அவரை வரச் சொல்லுங்க! கட்சி நிர்வாகி இல்ல விழாவில் மாஸ் காட்டிய இபிஎஸ்
திருவாரூர்: திருவாரூரில் அதிமுக நிர்வாகி இல்ல மண விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்த எடப்பாடி பழனிசாமி, முகூர்த்த நேரம் முடியப் போகும் தருவாயில் அவசரம் அவசரமாக சென்று மாங்கல்யம் எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்திய நிகழ்வு நடந்துள்ளது.
கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் முகூர்த்த நேரமே முடிந்திருக்கும் என்ற சூழலிலும், தனது வருகையை எதிர்பார்த்து மணமக்கள் குடும்பத்தினர் காத்திருந்தது எடப்பாடி பழனிசாமியை நெகிழச் செய்தது.
கூல் ஆக போகும் 4 மாவட்டங்கள்! இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்!
இதனிடையே ஆட்சியிலும் இல்லை, கட்சியிலும் நம்பர் 1 இடத்தில் இல்லை, ஆனாலும் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூரில் அளிக்கப்பட்ட வரவேற்பு பிரம்மாண்டமாக இருந்ததுடன் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஒரு பெரும் கூட்டமே அலைமோதியது.

அதிமுக நிர்வாகி
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவருமான கோபால் இல்ல திருமண விழா திருவாரூரில் இன்று காலை நடைபெற்றது. அந்த விழாவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்தி வைப்பார் என விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மணமேடைக்கு மணமக்களும் வந்துவிட்டனர், அழைக்கப்பட்டிருந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வந்துவிட்டனர். ஆனால் சிறப்பு விருந்தினரான எடப்பாடி பழனிசாமியை மட்டும் காணவில்லை.

மணமக்களுக்கு வாழ்த்து
இதனால் அவரு வருவாரா மாட்டாரா என்கிற அளவுக்கு திருமண வீட்டில் விவாதங்கள் ஓடத் தொடங்கின. இந்தச் சூழலில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என நடிகர் ரஜினிகாந்தின் சினிமா பஞ்ச் வசனம் போல் முகூர்த்த நேரம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அங்கு மாஸ் என்ட்ரி கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஓட்டமும் நடையுமாக நேராக மேடைக்கு சென்ற அவர் மாங்கல்யத்தை ஆசிர்வதித்து எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.

உற்சாக வரவேற்பு
எடப்பாடி பழனிசாமி காலதாமதமாக வருகை தந்ததற்கு காரணம் மாவட்ட எல்லையில் அவருக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பே காரணம் எனக் கூறப்படுகிறது. கொல்லுமாங்குடியில் அதிமுக தொண்டர்கள் பெருமளவில் திரண்டு நின்றதால் அந்த இடத்தை அவரால் உடனடியாக கிராஸ் செய்ய முடியவில்லையாம். இப்படியொரு வரவேற்பு ஏற்பாடுகள் இருக்கும் என எடப்பாடி பழனிசாமியே எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சசிகலா ஊர்
இதனிடையே திருமண விழாவை முடித்துக்கொண்டு கார் ஏறச் சென்ற எடப்பாடி பழனிசாமியை சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டினர். அவரும் மறுப்பு ஏதும் சொல்லாமல் புன்னகை முகத்துடன் செல்ஃபி பிரியர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். மன்னார்குடியை உள்ளடக்கிய சசிகலாவின் சொந்த மாவட்டமான திருவாரூரில் எடப்பாடி பழனிசாமிக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது அரசியல் ரிதியாகவும் முக்கியம் பெறுகிறது.