தமிழ்நாட்டில் விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு... அமைச்சர் சக்கரபாணி உறுதி
திருவாரூர்: தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்துள்ளார்
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சக்கரபாணி இதை தெரிவித்தார்.
குறுவை நெல்லுக்கான ஆதார விலையை 1960 ரூபாய் என்றிருந்ததை 12 ஆண்டுகளுக்குப்பின்னர் 2060 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அரசு பேருந்தில் மாஸ்க் போடாதவர்களை வறுத்தெடுத்த தேனி ஆட்சியர்.. வீடியோ வைரல்!

நலத்திட்ட உதவி வழங்கினார் சக்ரபாணி
திருவாரூர் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ரூ.2 கோடி மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி நாற்காலி மற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, வங்கிக் கடன் மானியம், திருமண உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நெல் ஆதார விலை உயர்வு
மேலும் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 17 நபர்களுக்கு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கானகிரீட் வீடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் சக்கரபாணி பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, குறுவை நெல்லுக்கான ஆதார விலையை 1,960 ரூபாய் என்று இதுநாள் வரை இருந்ததை 12 ஆண்டுகளுக்கு பின்னர் 2,060 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

800 மெட்ரிக் டன் அரிசி ஆலை
மேலும் கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் 3 லட்சம் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் விரைவில் 100 கோடி ரூபாய் மதிப்பில் 800 மெட்ரிக் டன் நெல் அரைக்கும் வகையில் அரிசி ஆலை நிறுவப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த புதிய அரிசி ஆலை தஞ்சை, திருவாரூர், நாகை மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து நிறுவப்பட உள்ளது என்றும் அவர் பேசினார்.

15 நாட்களில் ரேஷன் கார்டு
தமிழ்நாட்டில் இனி குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் வழங்கப்படும் எனவும், இதுவரை 7 லட்சத்து 52 ஆயிரம் நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் சக்கரபாணி நலத்திட்ட விழாவில் தெரிவித்தார். பொங்கல் திருநாளுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவை வழங்கப்படும்.