வங்கியில் வேலை கிடைச்சாச்சு! கை நிறைய சம்பளம்! ஊராட்சித் தலைவர் பதவிக்கு கும்பிடு போட்ட இளம்பெண்!
திருவண்ணாமலை: வங்கியில் வேலை கிடைத்ததை அடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர்.
மக்களுக்கு நன்மை செய்ய பதவியில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும், வங்கியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ள போதும் தனது ஊராட்சியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து தனது பங்களிப்பை செலுத்துவேன் எனவும் கூறியிருக்கிறார் அந்த இளம் பெண் எஞ்சினியர்.
இது தொடர்பாக பின்னணியை இங்கே பார்க்கலாம்.

திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் மேல் வில்வராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பொய்யாமொழி. அதிமுகவில் ஒன்றியச் செயலாளராக உள்ள இவர், தனது மகள் நிலவழகியை கடந்த 2020-ஆம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மேல் வில்வராயநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்தார். பொறியியல் பட்டதாரியான நிலவழகி, அந்த தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஊராட்சி மன்றத் தலைவர் ஆனார்.

தலைவர் பதவி
இளம் வயதில் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்த அவர், இரண்டரை ஆண்டுகள் மட்டுமே அதில் இருந்துள்ளார். நேற்று முன் தினம் தனது தலைவர் பதவியை நிலவழகி முறைப்படி ராஜினாமா செய்துவிட்டார். காரணம் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் அலுவலர் பணி கிடைத்திருப்பது தான். வங்கித் தேர்வு மூலம் இந்தப் பணிக்கு தேர்வாகியுள்ள நிலவழகிக்கு மேல் வில்வராயநல்லூர் கிராமமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ராஜினாமா கடிதம்
நிலவழகியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வதாக கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துவிட்டார். அரசுடமை வங்கியில் இப்போது அலுவலராக பணியில் சேரும் நிலவழகி எதிர்காலத்தில் மேலாளர், மண்டல அலுவலர் என பல உயர்ந்த இடங்களுக்கு வருவார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அவரை ஓட்டுப்போட்டு தேர்வு செய்த கிராமமக்கள்.

இடைத்தேர்தல்
மக்களுக்கு நன்மை செய்ய பதவியில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும், வங்கியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ள போதும் தனது ஊராட்சியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து தனது பங்களிப்பை செலுத்துவேன் எனவும் கூறியிருக்கிறார் நிலவழகி. இதனிடையே மேல் வில்வராயநல்லூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.