"கூட்டம் கூடுனது இப்படித்தானாம்.." அண்ணாமலை திட்டத்துக்கு வெற்றி மேல் வெற்றி - புது தெம்பில் பாஜக!
திருவாரூர்: திருவாரூரில் நடைபெற்ற பா.ஜ.க ஆர்ப்பாட்டத்திற்கு திரளான கூட்டம் கூடியதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதியின் பெயரை சூட்டக்கூடாது என வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூடிய கூட்டத்திற்கு சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்த முன்னாள் எம்.பியின் மகன் எஸ்.ஜி.எம்.ரமேஷ்தான் காரணம் என்கின்றனர் லோக்கல் கட்சியினர்.
திருவாரூரில் டெல்டாவை கூட்டி மாஸ் காட்டிய பாஜக அண்ணாமலை- இலங்கை போல தமிழகம்...திமுக அரசுக்கு சாபம்!

கருணாநிதியின் மாவட்டம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த மாவட்டம் திருவாரூர். நாத்திகராக இருந்தாலும், பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓடவைத்தவர் கருணாநிதி. அதனாலேயே அவர் 'தேர் ஓட்டிய நாத்திகர்' என திருவாரூர் உடன்பிறப்புகளால் புகழப்படுவது வழக்கம்.
இத்தகு பெருமையின் காரணமாக திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்ட வேண்டும் என திருவாரூர் நகரசபை தீர்மானம் நிறைவேற்றியது.

பாஜக ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயரை சூட்டக்கூடாது என வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய அண்ணாமலை, தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பிரதமர் மோடி பெயர் ஒன்றில் கூட வைக்கப்படவில்லை.

மனுநீதி சோழன் பெயர்
இப்படியே நடந்துகொண்டிருந்தால் தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இலங்கையில் ஏற்பட்ட நிலைமை தமிழகத்திற்கும் வரும். 2024 தேர்தல்தான் கோபாலபுரம் குடும்பத்துக்கு கடைசி தேர்தல்.
பல கிராமங்களில் மக்கள் தார் சாலைகள் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அங்கே புதிய சாலைகள் அமைத்து கருணாநிதி சாலை எனப் பெயர் வைக்கலாம். ஏற்கனவே உள்ள வீதிக்கு ஏன் கருணாநிதி பெயர்? மனுநீதி சோழன் ஆண்ட மண் இது. இந்த வீதிக்கு மனுநீதி சோழன் பெயர் வைக்க வேண்டும் எனப் பேசினார்.

சரியான கூட்டம்
அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க, அ.தி.மு.கவுக்கு கூடுவதற்கு நிகரான கூட்டம் கூடியது. பா.ஜ.க ஆர்ப்பாட்டத்திற்கு ஒருசிலர் மட்டுமே வரும் நிகழ்வுகளையே பார்த்துப் பழகியவர்களுக்கு இந்தக் கூட்டம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
ஒருவேளை போட்டோஷாப்பாக இருக்குமோ என்று கூட பலரும் சந்தேகப்பட்டனர். தி.மு.கவினரும் இது போட்டோஷாப் தான் என்றே தகவல்களைப் பரப்பி வந்தனர். ஆனால் உண்மையில், இந்தக் கூட்டம் கூடியது நிஜம்தான்.

முன்னாள் எம்.பி மகன்
பா.ஜ.க ஆர்ப்பாட்டத்திற்கு இந்த அளவுக்கு கூட்டத்தைக் கூட்டியது கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்த திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியை சேர்ந்த முன்னாள் நாகை எம்.பி முருகையாவின் மகன் எஸ்.ஜி.எம்.ரமேஷ் தான் என்கிறார்கள் லோக்கல் அரசியல்வாதிகள். ஒரே கூட்டத்தில் ஒட்டுமொத்த பா.ஜ.கவினரையும் யார் இவர் என திரும்பிப் பார்க்கவைத்து விட்டார் ரமேஷ்.

அரசியல் குடும்பம்
முன்னாள் கம்யூனிஸ்ட் எம்.பி முருகையாவின் மகனான எஸ்.ஜி.எம்.ரமேஷ் அ.தி.மு.கவில் திருவாரூர் எம்.ஜி.ஆர் இளைஞர் பேரவை துணைத் தலைவராக இருந்தவர். இவரது மைத்துனர்தான் தற்போது நாகப்பட்டினம் கம்யூனிஸ்ட் எம்.பியாக இருக்கும் செல்வராஜ். போதாக்குறைக்கு இவரது மாமனார் தி.மு.க விவசாய அணி செயலாளரும், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயன். இப்படி இவர்களது குடும்பமே பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பம்.

முன்னாள் - இந்நாள்
லோக்கல் செல்வாக்கு பெற்றுள்ள ரமேஷ்தான், அண்மையில் கட்சியில் இணைந்த நிலையில், பா.ஜ.க தலைவர்களுக்கு தனது பவரை காட்ட ஆட்களைத் திரட்டியுள்ளார். அவரது செல்வாக்கைப் பார்த்து பா.ஜ.கவினரே புருவத்தை உயர்த்தியுள்ளனர்.
முன்னாள் எம்.பி முருகையாவின் மகன் ரமேஷ், இந்நாள் எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா என மாற்றுக்கட்சி பிரமுகர்களின் வாரிசுகளை தொடர்ந்து பா.ஜ.கவுக்கு இழுத்து வரும் அண்ணாமலையின் திட்டத்திற்கு உடனடி பலன் கிடைத்துள்ளது பா.ஜ.கவினருக்கு கூடுதல் தெம்பு கொடுத்துள்ளது.