வீடு கட்ட தோண்டிய இடத்தில் வரிசையாக கிடைத்த சாமி சிலைகள்..குரு ஸ்தலமான ஆலங்குடியில் பரபரப்பு
திருவாரூர்: வீடு கட்ட தோண்டிய இடத்தில் வரிசையாக ஐம்பொன் சிலைகளும் கலயங்களும் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வலங்கைமான் வட்டாட்சியர் சிலைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள குரு ஸ்தலமான ஆலங்குடி பகுதியில், மண்டித் தெருவில் வசிக்கும் முத்து என்பவர் கடந்த 19.05 2022 அன்று.. அவரது இடத்தில் வீடு கட்டுவதற்காக ஜேசிபி எந்திரத்தின் மூலமாக குழி பறித்துள்ளார்.

இந்த நிலையில், வெட்டப்பட்ட குழிக்குள் சுமார் 3 அடி உயரம் கொண்ட சிலை, 1 அடி உயரமுள்ள சிலை மற்றும் சிறிய வகை சிலைகள் அடங்கிய உலோக கலையமும் கிடைத்தது.
வலங்கைமான் வட்டாட்சியர் சிலைகளை கைப்பற்றி வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில்..தொடர்ந்து இன்று மீண்டும் வீடு கட்டும் பணி துவங்கிய நிலையில்..
அதே இடத்தில் ஒன்றரை அடி சிலை ஒன்றும், 1 அடியில் இரண்டு சிலைகள் மற்றும் கால் அடி அளவுள்ள பெருமாள் சிலை ஒன்றும், 7 உலோக கலயங்களும் கிடைத்துள்ளது.
உடன் வலங்கைமான் வட்டாட்சியரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் சிலைகளை கைப்பற்றி வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். இவை அனைத்தும் ஐம்பொன்னால் ஆனது எனக் கூறப்படுகிறது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.