• search
திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

'பேர் வைத்தாயே? சோறு வைத்தாயா?' மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பு குறித்து ஸ்டாலின் சரமாரி கேள்வி

Google Oneindia Tamil News

திருவாரூர்: "அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் மயிலாடுதுறை என்று புதிய மாவட்டத்துக்கு பெயர் வைத்துவிட்டால் மட்டும் போதுமா?"
"பணத்தை காட்டினால் மட்டும் தான் 'ஓ! யெஸ்' என்பவராக அமைச்சர் ஓ.எஸ். மணியன் இருக்கிறார்; பெருந்தலைவரின் பெயரை வைத்துக் கொண்டு ஊழல் செய்யும் அமைச்சர் காமராஜ், தன்னுடைய பெயரை 'கமிஷன்ராஜ்' என்று மாற்றிக் கொள்ளலாம்! - இவர்களால் அவர்களது மாவட்டங்களுக்கும் தொகுதிகளுக்கும் எந்தப் பயனும் இல்லை!" என திருவாரூர் - நாகை தமிழகம் மீட்போம் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் , நாகை, திருவாரூர் மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்று
உரையாற்றினார். அவர் கூட்டத்தில் பேசியதாவது: எத்தனையோ மாவட்டங்களில் 'தமிழகம் மீட்போம்' பொதுக்கூட்டம் நடந்திருந்தாலும், திருவாரூர் - நாகை என்பதால் எனக்கே கொஞ்சம் கூடுதல் பாசம் ஏற்படுகிறது. முத்தமிழறிஞர் கலைஞரை நமக்குத் தந்த மாவட்டம் இது என்பதால் ஒருவித நெகிழ்ச்சியான மனநிலையில் நான் நின்று கொண்டு இருக்கிறேன்!

தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ, அங்கெல்லாம் தமிழினத் தலைவராகக் கலைஞர் அவர்கள் போற்றப்பட்டார். ஆனாலும், அவரிடம் உங்களுக்குப் பிடித்த ஊர் எது என்று கேட்டபோது, 'நான் பிறந்த திருக்குவளை' என்று தான் சொல்வார். அந்தளவுக்கு தான் பிறந்த ஊர் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தார் கலைஞர். "உருக்குலையா மங்கையவள் ஒளிமுகத்தை முத்தமிட கருக்கலிலே கண்விழிக்கும் திருக்குவளை" என்று கவிஞர் சுரதா அவர்கள் எழுதிய வரிதான் தனக்கு பிடித்த வரி என்று சொல்லி இருக்கிறார்கள். அந்தளவுக்கு தான் பிறந்த ஊரைக் காதலித்தவர் கலைஞர் திருக்குவளையில் தான் பிறந்தார். 12 வயது வரைக்கும் திருக்குவளையில் தான் வாழ்ந்தார். திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தான் படித்தார். அதன்பிறகு உயர்நிலைக்கல்விக்காக திருவாரூர் வந்தார்கள்.

சிறையில் கலைஞர்

சிறையில் கலைஞர்

திருவாரூர் கீழவீதி, மானந்தியார் தெருவில் மரியாதைக்குரிய சொர்ணம் அவர்களது தந்தையார் வீட்டில் தங்கி கல்வி கற்றார். சிறுவர் சீர்திருத்த சங்கம், தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்புகளைத் தொடங்கியதும் திருவாரூரில் தான்! மாணவநேசன் - முரசொலி போன்ற இதழ்களை உருவாக்கியதும் திருவாரூர் தான்! அந்த அடிப்படையில் கலைஞர் அவர்கள் கருவான ஊர், இந்த திருவாரூர்! கழகம் நடத்திய மும்முனைப் போராட்டத்தில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த தலைவர் கலைஞர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்கள். கைக்குழந்தையாக இருந்த என்னை, எனது தாயார் தயாளு அம்மையார் அவர்கள், திருச்சிக்கு தூக்கிச் சென்று கலைஞரிடம் காட்டினார்கள். அந்தக் காலக் கட்டத்தில் 'திராவிட நாடு' இதழில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள். அது என்ன தெரியுமா? "திருச்சி சிறையில் வாடும் தோழர் கருணாநிதி அவர்களின் குடும்பத்தினர் சென்னையில் இருந்து திருவாரூக்குச் சென்றுவிட்டனர். அவரது சென்னை முகவரிக்கு அனுப்பப்பட்டு வந்த இயக்க ஏடுகளை எல்லாம் இனி, 'மு.கருணாநிதி, தெற்குவீதி, திருவாரூர்' எனும் முகவரிக்கு அனுப்புமாறு கருணாநிதியின் அன்னையார் கேட்டுக் கொள்கிறார்" என்று செய்தி வெளியிட்டுள்ளார் பேரறிஞர் அண்ணா.குடும்ப அரசியல் என்று குதர்க்க எண்ணத்தோடு இன்று சிலர் பேசித் திரிகிறார்களே, அவர்களுக்குச் சொல்வேன், இது குடும்பம் குடும்பமாகச் சேர்ந்து இயக்கம் வளர்த்த கட்சியப்பா என்பது தான் அவர்களுக்கு நான் சொல்லும் பதில்!
குடும்பம் குடும்பமாகப் பாடுபட்டோம்! குடும்பம் குடும்பமாகப் போராடினோம்! குடும்பம் குடும்பமாகச் சிறைப்பட்டோம்! குடும்பம் குடும்பமாகச் சித்திரவதைப் பட்டோம்! அதனால் தி.மு.க. என்பது குடும்பக் கட்சி தான்! பல்வேறு குடும்பங்களின் கட்சிதான்!

குளித்தலை, தஞ்சாவூர், சைதாப்பேட்டை, அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம் - என எத்தனை தொகுதிகளில் கலைஞர் போட்டியிட்டாலும் இறுதியாய் வந்து நின்ற இடம் திருவாரூர். ஒரு முறையல்ல, இரண்டு முறை வென்ற இடம் திருவாரூர். அவர் முதன்முதலாக நாகப்பட்டினத்தில் போட்டியிடத்தான் விரும்பினார். நாகை தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து, அது பற்றி முழு ஆய்வையும் கலைஞர் அவர்கள் நடத்திவிட்டார்கள்.ஆனால் அண்ணா அவர்கள் குளித்தலை தொகுதியில் தான் கலைஞர் அவர்களை போட்டியிட வைத்தார்கள். அண்ணாவின் ஆசையை மறுப்பாரா கலைஞர்? ஏற்றுக் கொண்டார். நின்றார். வென்றார். ஆனால் தனது ஆசையை மனதுக்குள் வைத்திருந்தார். இறுதியில் வந்து திருவாரூரில் நின்று அதனை நிறைவேற்றிக் கொண்டார் கலைஞர் . திருக்குவளையில் பிறந்து, திருவாரூர் மகனாகவே இறுதியில் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் கலைஞர். அத்தகைய திருவாரூரில் இன்று ‘தமிழகம் மீட்போம்' பொதுக்கூட்டம் நடைபெறுகிறது!

ஆழித்தேர்

ஆழித்தேர்

எல்லைகளால் திருவாரூம் - நாகையும் பிரிக்கப்பட்டு இருந்தாலும், உணர்வால் பிரிக்க முடியாத மாவட்டம் என்பதைக் காட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். ஒன்றாகவே கூட்டமும் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்! திருவாரூர் மாவட்டம் என்றால் திருவாரூர் கு.தென்னன், நன்னிலம் நடராசன், சித்தமல்லி சோமசுந்தரம், மன்னை பாலகிருஷ்ணன், திருவாரூர் ராசன், இலக்குமணன்குடி தட்சிணாமூர்த்தி, புலிவலம் ஜான் ஆகியோர் நினைவுக்கு வருவார்கள். நாகை என்றால் என்.கிட்டப்பா, வெங்கிடங்கால் சந்தானம், செம்பனார்கோவில் மதியழகன், மாயவரம் செங்குட்டுவன், சிக்கல் கணபதி, பொறையாறு சம்பந்தம், மா.மீனாட்சிசுந்தரம், பூம்புகார் மனோகரன், விளநகர் கணேசன், சீர்காழி குமாரசாமி ஆகியோர் நினைவுக்கு வருவார்கள். இந்த ஆற்றல் மிக்க திராவிடத் தியாகிகள் வரிசையில் இன்றைய தினம் கழகத்தை வளர்த்து வரும் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் பூண்டி கலைவாணன், நாகை வடக்கு நிவேதா முருகன், நாகை தெற்கு கெளதமன் - ஆகிய மூவரையும் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். திருவாரூரில் வளர்ந்தவர் மட்டுமல்ல கலைஞர்; திருவாரூரை வளர்த்தவர் கலைஞர். தேர்களில் திருவாரூர் தேர் தான் அழகானது என்பார்கள். ஆசியாவிலேயே சிறப்பு பெற்ற திருவாரூர் ஆழித்தேர் 1948-ஆம் ஆண்டுக்கு பின் 22 ஆண்டுகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று திருவாரூர் தேர் மீண்டும் ஓடுவதற்கு முழு முயற்சி எடுத்தார் முதலமைச்சர் கலைஞர். திருவாரூர் ஆழித்தேரை 1970-இல் ஓட வைத்தார். தேர் செல்லும் பாதைகளையும் செப்பனிட்டார். திருவாரூர் ஆழித்தேர் நான்கு வீதிகளிலும் சிரமமின்றிச் சென்று வீதி உலா வர, நான்கு மாட வீதிகளையும் சிமெண்ட் சாலையாக 2006-ஆம் ஆண்டு மாற்றி கொடுத்தவரும் முதல்வர் கலைஞர் தான். "திருவாரூர் தியாகராஜர் கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி" என்ற சிறப்புப் பெற்ற திருவாரூர் திருக்குளமான கமலாலயக் குளத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தி.மு.க. ஆட்சி காலத்தில் 2001-இல் தான் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தூர்வாரப்பட்டது. திருவாரூர் என்ற புதிய மாவட்டத்தையே அவர் தான் உருவாக்கினார். ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற அலுவலகம் ஆகியவற்றைப் பிரமாண்டமாகக் கட்டினார். * திருவாரூர் நகராட்சிக்குப் புதிய கட்டடம் கட்டித் தந்தது தி.மு.க. * மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டாலும் 2013-ஆம் ஆண்டு தான் அ.தி.மு.க. ஆட்சி அதை முடித்தது.* புதிய பேருந்து நிலையத்துக்கு 2010-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு இருந்தாலும் காழ்ப்புணர்ச்சி காரணமாக 2019-இல் தான் திறப்புவிழா செய்தார்கள்.* திருவாரூரில் திரு.வி.க. அரசு கல்லூரியை 1970-இல் உருவாக்கியவர் கலைஞர். * தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தை 2009-இல் திருவாரூரில் அமைத்துக் கொடுத்தார் முதலமைச்சர் கலைஞர்! 2010-ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியையும் அமைத்தது தி.மு.க. மன்னார்குடியில் அரசு கலைக் கல்லூரி * பாமணி உரத் தொழிற்சாலை* மாவட்டம் முழுக்க குடிநீர் வசதிகளை உருவாக்கினார் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த அண்ணன் கோ.சி.மணி, டி.ஆர்.பாலு முயற்சியால் ஐந்து புதிய ரயில்கள் விடப்பட்டன. அதில் முக்கியமானது செம்மொழி எக்ஸ்பிரஸ்! மன்னையில் இருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் விட்டதும் திமுகவின் முயற்சியினால் தான்.

அரிசி விற்பனை

அரிசி விற்பனை

இதே போல் நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவந்த அரசு தி.மு.க. அரசு! இந்த பகுதியில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஓ.எஸ்.மணியம். இன்னொருவர் காமராஜ். அமைச்சர் காமராஜ் என்ன செய்கிறார்? என்ன செய்து கொடுத்தார்? கொள்ளை அடிக்கிறார். அவ்வளவு தான். ஒற்றை வரியில் சொல்லி விடலாம்! இந்த கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக அரிசி கொடுக்கிறது. அந்த அரிசியை வெளிச்சந்தையில் விற்று ஊழல் செய்துள்ளார் உணவு அமைச்சர் காமராஜ்! ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு சொல்கிறது. இதன் படி தமிழகத்துக்கு மத்திய அரசு மொத்தம் 5 லட்சத்து 36 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கியுள்ளது. இந்த அரிசியை வாங்கி அனைவருக்கும் கொடுத்துவிட்டதாக பேட்டி தரும் அமைச்சர் காமராஜ் தான், இவ்வளவு அரிசியை வைக்க இடமில்லை என்று மத்திய அரசிடம் சொன்னதாகவும் பேட்டி தருகிறார். எது உண்மை? இந்த அரிசியை தான் இவர்கள் வெளிச்சந்தையில் விற்றுள்ளார்கள். இப்படி அரிசி எடுத்துச் செல்லப்பட்டபோது தூத்துக்குடியில் பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிக்கைகள், அறிவிப்புகள் முன்னுக்கு பின் முரணாக இருக்கின்றன. சாப்பாட்டுத் தட்டில் திருடும் அமைச்சராக அவர் இருக்கிறார். அவர் உணவுத்துறை அமைச்சராக இருக்கும் இந்த ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் டன் கணக்கில் நெல்மணிகள் வீணாகியது. சமீபத்தில் பெய்த மழையால் கொள்முதல் நிலையங்களை ஒழுங்காக பராமரிக்காததால் நெல் வீணாகியது. சுமார் 50 ஆயிரம் மூட்டைகள் வீணானதாக செய்தி வந்தது. அரசு அறிவித்துள்ளபடி நெல் கொள்முதல் செயல்படாததால், நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகி வருவதாக தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஊடகங்களில் பேட்டி கொடுத்தார்கள்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தினசரி ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு சொன்னது. ஆனால் சொன்னபடி வாங்கவில்லை! தஞ்சையை அடுத்துள்ள குருவாடிப்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியருடன் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த விவசாயிகள், நாள் ஒன்றுக்கு 400 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சரிடம் தெரிவித்தனர். அவர்களுக்கு அமைச்சர் முறையான பதிலைச் சொல்லவில்லை. கம்ப்யூட்டர் சரியில்லை, சாக்குமூட்டைகள் இல்லை, அதிகாரிகள் வரவில்லை என்ற பொய்களைச் சொல்லி நெல் கொள்முதலை இவர்கள் தாமதப்படுத்தியதால் விவசாயிகளிடம் இருந்த நெல் அழிந்தது!
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைக்க இடமில்லாமல் அவையும் அழிகிறது. இதை எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்தார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்! நெல்லை கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளிடம் அதிகாரிகள் பணத்தை லஞ்சமாக வாங்கும் கொடுமையும் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்துள்ளது. எங்களுக்கு கமிஷன் கொடுத்தால் தான் நெல்லை வாங்குவோம் என்று விவசாயிகளை சில அதிகாரிகள் மிரட்டி உள்ளார்கள். இது பற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒருவர் வழக்கே தாக்கல் செய்தார். ''விளை பொருளை விற்க முடியாமல் விவசாயி தவிக்கும் நிலையில் அரசு அதிகாரிகள் இலஞ்சம் கேட்பது வேதனைக்குரியது. இது பிச்சை எடுப்பதற்கு சமம்" என்று நீதியரசர்கள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய பெஞ்சு கூறியது. இதைக் கேட்ட பிறகும் அமைச்சர் பதவியில் காமராஜ் எப்படி நீடிக்கிறார்? காமராஜ் என்று சொன்னால் பெருந்தலைவர்தான் அனைவருக்கும் நினைவில் வருவார். அவரது பெயரை வைத்துக் கொண்டு, இப்படி நடந்து கொள்வதற்கு அமைச்சர் காமராஜூக்கு அவமானமாக இல்லையா? அமைச்சர் காமராஜ் தனது பெயரை கமிஷன்ராஜ் என்று வேண்டுமானால் பெயர் மாற்றிக் கொள்ளட்டும். இந்த மாவட்டத்துக்கோ, தனது தொகுதிக்கோ அமைச்சர் காமராஜ் செய்த நன்மைகள் என்ன? * நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மைதானத்தை சீரமைத்து தருவதாகச் சொன்னாரே. செய்தாரா? * வலங்கைமான் சுற்றுச்சாலை அமைத்தாரா? இல்லை! நன்னிலம், குடவாசல், வலங்கைமான் பகுதி மருத்துவமனைகளைத் தரம் உயர்த்திக் கொடுத்தாரா? இல்லை!

நீதிமன்றத்தில் வழக்கு

நீதிமன்றத்தில் வழக்கு

நெல் கழிவிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை கொண்டு வருவதாக சொன்னார்கள். வந்ததா? இல்லை! * நன்னிலம் பகுதியில் அமைச்சர் காமராஜ் துணையுடன் வரலாறு காணாத அளவுக்கு மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. பல கட்ட முயற்சிக்கு பின் குடவாசலில் அரசு கலைக் கல்லூரி துவங்கப்பட்ட நிலையில் கல்லூரிக்கு எனத் தனியாகக் கட்டடம் இல்லாததால் அருகில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. உள்கட்டமைப்பு வசதி இல்லாமல் எதற்காகக் கல்லூரியை அறிவிக்கிறீர்கள். பெருமைக்காக அறிவிக்கிறீர்களா? * நன்னிலம் நீங்கலாக மற்ற பகுதிகளுக்கு எந்த திட்டமும் வரவில்லை, நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்று கூறி மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாரே? அதற்கு அமைச்சர் காமராஜின் பதில் என்ன? நன்னிலம் மக்களிடம் கேட்டால் எங்கள் தொகுதிக்கும் எதுவும் செய்யவில்லை என்கிறார்கள்!

தஞ்சை - நாகை இடையே நான்கு வழிச்சாலைத் திட்டத்தை தி.மு.க. அரசு கொண்டுவந்த நிலையில் பத்து ஆண்டுகளாக அதனை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை! வண்டல் - அவரிக்காடு இடையே பாலம் அமைக்கும் பணி கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதை 10 ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க. ஆட்சி நிறைவேற்றி உள்ளது. கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க கழக ஆட்சி முயற்சிகள் மேற்கொண்டது. அதனை அ.தி.மு.க. ஆட்சி முடக்கிவிட்டது. திருவாரூர் - நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி இடையே அகல ரயில் பாதை திட்டம் கொண்டு வரப்பட்டது. அதைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். நீடாமங்கங்கலம் ரயில்வே பாலத்துக்கு நிதி ஒதுக்க காரணமானது தி.மு.க. இதுவரை அ.தி.மு.க.வினர் அதைக் கொண்டுவரவில்லை!
கஜா புயலில் சேதமடைந்த பயிர்களுக்கு சரியான இழப்பீடு இன்றுவரை கொடுக்கப்படவில்லை.2018-ஆம் ஆண்டு இன்ஷூரன்ஸ் வழங்குவதில் மிகப்பெரிய குளறுபடிகளைச் செய்தது இந்த அரசு. அப்போது சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா நேரடியாக சென்னையில் உள்ள அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா நிறுவனத்திற்கு விவசாயிகளை அழைத்துக்கொண்டு போய் அங்கே போராடி ஒட்டுமொத்த திருவாரூர் மாவட்டத்திற்கு உரிய நிவாரணத்தையும் பெற்றுத் தந்தார். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்தார். ஏதாவது இதுவரை வந்ததா? இல்லை! கழிவறை கட்டுவதில் கூட ஊழல் செய்த ஆட்சி இந்த ஆட்சி! மன்னார்குடியைச் சேர்ந்த எடக்கழியூர் கிராமத்தில் கழிவறை கட்டுவதில் ஊழல் நடந்துள்ளது என்று 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா சுட்டிக்காட்டினார். அதன்பிறகு கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு அது உண்மை என என்று ஏற்றுக் கொண்டார்! இன்றும் ஊழல் தொடரத்தான் செய்கிறது! இதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள்!

5000 தர கேட்டேன்

5000 தர கேட்டேன்

2500 ரூபாயை பொங்கல் பரிசு என்ற பெயரால் கொடுக்கிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் தரச் சொன்னேன். மக்கள் அடைந்த துன்ப துயரங்களுக்கு அளவே இல்லை. அந்த மக்களின் துயரைப் போக்குவதற்காகத் தான் ‘ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தை தொடங்கினோம்.அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தின்கீழ் அரிசி, பருப்பு, மளிகை பொருள்கள், காய்கறிகள், மருந்துப் பொருள்கள் கொடுத்தோம். ஆட்டோ டிரைவர்கள், அன்றாட ஊதியம் வாங்குவபர்களுக்கு நிதி உதவியும் செய்தோம். பல ஊர்களில் உணவு தயாரித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக வழங்கினோம். நாம் ஆட்சியில் இல்லை. ஒரு அரசியல் கட்சியால் எந்த அளவுக்கு நன்மை செய்ய முடியுமோ அதைவிடக் கூடுதலாகவே செய்தோம். கழகத் தோழர்கள், நிர்வாகிகள் பலரும் கடன் வாங்கி இம்மாதிரி உதவிகளைச் செய்தார்கள். அது தான் உண்மை.
ஆனால் இந்த எடப்பாடி அரசாங்கம் என்ன செய்தது? எதுவும் செய்யவில்லை. 5 ஆயிரம் கொடுங்கள் என்று நான் சொன்ன போது, நிதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நிவர் புயலின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.10,000 வழங்குமாறு கேட்டேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 வழங்கச் சொன்னேன். ஆனால் இன்றைக்கு 2500 ரூபாய் தரப்போவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு என்ற பெயரால் கொடுக்கப் போகிறாராம். அது பொங்கல் பரிசல்ல, தேர்தல் வரப்போகிறது அல்லவா? அதற்காக கொடுக்கிறார்.மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் தராமல் தேர்தல் வருவதால் தனது சுயநலத்துக்காக கொடுக்கிறார். அரசாங்க பணத்தை தனது கட்சியின் நன்மைக்கு பயன்படுத்துகிறார்.
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே! - என்று சொல்வார்கள். ஒருவன், பக்கத்து வீட்டுக்கு விருந்துக்கு போனானாம். அங்கே சமையல் பரிமாறியது அவனது மனைவியாம். கணவரைப் பார்த்ததும் நெய்யை அதிகமாக ஊத்தினாராம் மனைவி. அதுதான் ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே! அதுமாதிரி அரசாங்கப் பணத்தை எடுத்து அதிமுகவின் நன்மைக்காக செலவு செய்து, ஏதோ தாராள பிரபுவைப் போல தன்னைக் காட்டிக் கொள்கிறார் பழனிசாமி!

ஸ்டாலின் கேள்வி

ஸ்டாலின் கேள்வி

இன்றைய தினம் காலையில் அவசர அவசரமாக மயிலாடுதுறை மாவட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி! மயிலாடுதுறை மாவட்டமாக அறிவித்தீர்களே, என்ன செய்தீர்கள் என்று நான் மாலையில் கேள்வி எழுப்புவேன் என்பதை உணர்ந்து இன்று காலையில் தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர். மயிலாடுதுறை என்ற புதிய மாவட்ட அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி முதலமைச்சர் செய்தார். ஏப்ரல் 7-ஆம் தேதி இதற்கான அரசாணை வெளியிட்டப்பட்டது. சிறப்பு அதிகாரி ஒருவரை ஜூன் மாதம் நியமித்தார்கள். எல்லைப் பிரிப்பு குழுவை அமைத்தார்கள். இதுவரை எல்லை பிரிக்கப்பட்டதா? ஏப்ரல், மே, ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 8 மாதம் போய்விட்டது. இன்று டிசம்பர் 28. அதாவது ஒன்பதாவது மாதமும் முடிந்துவிட்டது. மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஆட்சியர் அலுவலகம் எங்கே? காவல் துறை ஆணையர் அலுவலகம் எங்கே? தரங்கம்பாடி சாலையில் இருக்கும் ஆர்.டி.ஓ. அலுவலக பங்களாவில் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது. வேளாண் விரிவாக்க மையத்தில் தான் எஸ்.பி.அலுவலகம் இருக்கிறது. இதுதான் புதிய மாவட்டமா? மயிலாடுதுறை என்ற புதிய மாவட்டம் உதயமாகும் இந்த நாளில் நகரில் உள்ள பாதாளச் சாக்கடை உடைந்து முக்கியப் பகுதிகளில் சாக்கடை ஓடுகிறது என்று பொதுமக்கள் சொல்கிறார்கள். இதுதான் ஒரு மாவட்டத் தலைநகரத்தின் லட்சணமா? புதிய மாவட்டம் உதயமானால், அதற்கான உள்கட்டமைப்பு வசதி செய்து தரப்பட வேண்டாமா? சும்மா பேர் வைத்தால் போதுமா? ' பேர் வைத்தாயே? சோறு வைத்தாயா?' என்று கேட்பார்கள். அது போல ஒரு முதலமைச்சர் நடந்து கொள்ளலாமா? நேற்றைய தினம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர், இதுவரை நான் எழுப்பிய கேள்விகளுக்கு ஏதாவது பதில் சொல்லி இருக்கிறாரா? என்று பார்த்தேன். எந்தப் பதிலும் சொல்லவில்லை! அவரால் சொல்ல முடிந்தால் தானே சொல்வார்? 'அ.தி.மு.க. அரசின் மீது ஊழல் புகார்களை பொய்யாகச் சொல்லி வருவதாகவும், அதனை ஆளுநரிடம் கொடுத்துள்ளதாகவும்' முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். பொத்தாம் பொதுவாக பொய் என்று எப்படிச் சொல்ல முடியும்? முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், உதயகுமார், காமராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மீது ஊழல் புகார் கொடுத்துள்ளோம். அதனையும் ஆதாரங்களுடன் கொடுத்துள்ளோம். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் யாராவது மறுப்பு சொல்லி இருக்கிறார்களா? ஆதாரங்களுடன் மறுத்துள்ளார்களா? 'என்னுடைய உறவினர்கள் டெண்டர் போட்டது எனக்குத் தெரியாது' என்று பதில் சொல்கிறார் பழனிசாமி. உறவினர்கள், பினாமிகள் பெயரால் கோடிக்கணக்கான மதிப்பு டெண்டர்கள் எடுக்கப்பட்டதற்கு இதுவரை பதில் இல்லை! நான் யோக்கியன் என்றால் எதற்காக உச்சநீதிமன்றம் போனார் முதலமைச்சர்? வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து பன்னீர்செல்வத்தின் பதில் என்ன? பினாமி நிறுவனங்கள் மூலமாக டெண்டர்கள் எடுத்தது குறித்து வேலுமணியின் பதில் என்ன? இவை எதற்கும் பதில் சொல்லாமல் எந்த முகத்தை வைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறீர்கள்? அவருக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்று தான், நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள். நிச்சயம் ஏமாந்து போவீர்கள்! இந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது. பதவியைப் பறிக்கும். உங்கள் அரசியலுக்கே முற்றுப்புள்ளி வைக்கும் என்று எச்சரிக்கை செய்து விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம். இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.

English summary
dmk leader Stalin's question about the Mayiladuthurai district announcement by cm edappadi palanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X