திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் கோலாகலம் - பக்தர்கள் ஆருரா தியாகேசா முழக்கம்
திருவாரூர்: ஆரூரா... தியாகேசா முழக்கம் எங்கும் எதிரொலிக்க திருவரூரில் ஆழித்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். ஆழித்தேருடன், கமலாம்பிகை அம்மன் தேரும், சண்டிகேஸ்வரர் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
திருவாரூரில் பிறந்தாலும், திருவாரூர் என்ற பெயரை சொன்னாலும் முக்தி கிடைக்கும் என்பார்கள்
சர்வ தோஷங்களையும் நீக்கும் பரிகார தலமாக உள்ள திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ஆழித்தேர் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. ஆழித்தேரோட்ட திருவிழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஐதீகம்.
இக்கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக கொண்டது. பஞ்ச பூதங்களுக்கு உரிய கோவில்களில் பூமிக்குரிய கோவிலாகும். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது. ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்! ஆழித்தேரோட்டம் தேதி அறிவிப்பு

ஆழித்தேரோட்டத்தின் பெருமை
ஆழி என்றால் மிகப்பெரியது என்று பொருளாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

உலக புகழ் பெற்ற ஆழித்தேர்
திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித் தேரானது மற்ற ஊர் தேர்களை போல் எண்பட்டை அறுகோணம், வட்டவடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பினை கொண்டதாகும். மொத்தம் 20 பட்டைகளை கொண்ட இந்த தேரானது நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பகுதி 20 அடி உயரமும், 2வது பகுதி 4அடி உயரமும், 3வது பகுதி 3அடி உயரமும் கொண்டதாகவும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாகரஜசுவாமி அமர்ந்து வலம் வருவார். மேலும் சாதாரணமாக 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட இந்த தேரானது 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும்.

ஆசியாவின் மிகப்பெரிய தேர்
திருவாரூர் தியாகேசர் கோயில். இங்கு, சிவப்பெருமான் ராஜாவாக காட்சியளிக்கிறார். பெரிய கோயிலின் புகழுக்கு புகழ் சேர்க்கிறது திருவாரூர் ஆழித்தேர். இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராகும். திருவாரூர் தேரழகு என்ற பெருமை உண்டு. அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். "ஆருரா... தியாகேசா" என்ற முழக்கத்துக்கு நடுவில் அசைந்தாடிவரும் ஆழித்தேரின் அழகு காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

இன்று ஆழித்தேரோட்டம்
இத்தகைய சிறப்புமிக்க, ஆழித் திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. சரியாக இன்று காலை, 8.10 மணிக்கு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
முன்னதாக அதிகாலை 5 மணிக்கு விநாயகர் தேரோட்டம் துவங்கியது. அதன்பின்னர் காலை 7 மணி அளவில் தியாகராஜர் சுவாமி எழுந்தருளிய ஆழித்தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரை தொடர்ந்து கமலாம்பாள், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்கள் வரிசையாக சென்றன.

பக்தர்கள் தரிசனம்
அலங்கரிக்கப்பட்ட தேருக்கு முன்பாக 4 மரக்குதிரைகள், ரிஷபம் 8, யாளம் 2, பாம்பு யாளம் 1, பிர்மா 1, துவாரபாலகர் 2, கமாய் கால் 2, மேல் கிராதி 4, கீழ் கிராதி 2, பெரிய கத்தி கேடயம் 2, பூக்குடம் 16, ராஜாராணி 2, கிழவன் கிழவி 2, சுருட்டி 4, இலை 8, பின்பக்கம் காமாய் கால் 6, அம்பராத்தோணி 2 என மொத்தம் 68 வகையான பொம்மைகள் பொருத்தப்பட்டு தேரோட்டம் நடைபெறும். இதில் திருவாரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள், வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள்
தேரோட்ட நிகழ்வினைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவாரூரில் குவிந்துள்ளனர். திருவாரூர் ஆழித் தேரோட்டத்தையொட்டி, திருவாரூர் எஸ்பி விஜயகுமார் தலைமையில், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த, 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.