டக்கென கேமராவை வாங்கிய திருமாவளவன்.. அடுத்து செய்த காரியத்தால் நெகிழ்ந்த புகைப்படக் கலைஞர்
திருவாரூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது புகைப்படக் கலைஞர் தமிழ் இமயனிடம் கேமராவை வாங்கி அவரை புகைப்படம் எடுத்து நெகிழ வைத்து இருக்கிறார்.
திருவாரூர் மாவட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பணிகளை மேற்கொண்டார்.

பல ஊர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அவர் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார். அதைத் தொடர்ந்து திருவாரூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். இதனையடுத்து அவருடைய புகைப்படக் கலைஞர் தமிழ் இமயன் படம்பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போதை தமிழ் இமயன் வைத்திருந்த கேமராவை வாங்கி "என்னை நீ புகைப்படம் எடுக்கிறாய், உன்னை நான் புகைப்படம் எடுக்கிறேன்." என்று கூறி தொண்டர்கள் தனக்கு அணிவித்த மலர் கிரீடத்தை புகைப்படக் கலைஞர் தமிழ் இமயனுக்கு அணிவித்து புகைப்படம் எடுத்து மகிழ்வித்தார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.