"அப்ப மட்டும் போய் பார்க்க கூடாது".. ஹோட்டலில் இரவு நடந்த மீட்.. அழுத்தி சொன்ன ஸ்டாலின்.. என்னாச்சு?
திருவாரூர்: டெல்டாவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்பும் நிலையில் நேற்று இரவு தனது ஹோட்டல் அறையிலேயே முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் தற்போது டெல்டாவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். நேற்று தஞ்சாவூரில் நடக்கும் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
டெல்டாவில் பல்வேறு மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் நடக்கின்றன. பல ஆறுகள், ஏரிகள், குளங்கள், சிறிய கண்மாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
“சிக்கலைத்தான் கொண்டு வர்றீங்க..” - அப்செட்டான முதல்வர் ஸ்டாலின் - அதிரடி ஆர்டரின் பின்னணி என்ன?

ஸ்டாலின் பயணம்
இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பல்வேறு பகுதிகளுக்கு ஆய்வு பணிக்காக முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கும் பல்வேறு இடங்களில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. கல்லாறு தூர்வாரும் பணிகளை அவர் பார்வையிட்டார். அதன்பின் திருவாரூர் சென்று அங்கும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

நாகை பயணம்
இந்த பயணத்தின் போது நேற்று இரவுதான் முதல்வர் ஸ்டாலின் நாகை மாவட்டத்திற்கு சென்றார். அங்கு வேளாங்கண்ணியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் தங்கினார். இரவு அங்கேயே சாப்பிட்டார். இதையடுத்து அங்கு இருந்த டெல்டா மாவட்ட நிர்வாகிகள் சிலரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து சில நிமிடங்கள் பேசினார். சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது.

தொண்டர்கள் சந்திப்பு
இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களை நிர்வாகிகள் மதிக்க வேண்டும். அவர்கள் இல்லாமல் கட்சி இல்லை. மாவட்ட செயலாளர்கள் தொண்டர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று கூறினார். நேற்றும் இரவு இந்த சந்திப்பில் டெல்டா மாவட்ட நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் இதே அறிவுரைகளை வழங்கி இருக்கிறாராம். தொண்டர்கள்தான் முக்கியம் என்று அழுத்தி சொன்னாராம்.

டெல்டா சொந்த மண்
டெல்டா என் சொந்த மண். இங்கே இருக்கும் தொண்டர்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகிகள் கவனமாக கேட்டு நிறைவேற்ற வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் தொண்டர்களை தேடி செல்ல கூடாது.. அப்ப மட்டும் பேசுவதில் அர்த்தம் இருக்காது என்று நேற்று நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினாராம். சில முக்கியமான தலைகள் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் மொத்தமாகவே இந்த சந்திப்பு சில நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

கோப்புகள் சோதனை
அதன்பின் சில கோப்புகளை முதல்வர் ஸ்டாலின் சோதித்துவிட்டு, உறங்க சென்றுள்ளார். இன்று டெல்டா பயணத்தை முடிக்கும் முதல்வர் ஸ்டாலின் மாலை 4 மணி அளவில் திருச்சி செல்கிறார். பின்னர் அங்கிருந்து அப்படியே சென்னைக்கு புறப்படுகிறார். இந்த பயணத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விவசாயிகளை சந்தித்தார். அவர்கள் வைத்த கோரிக்கை மனுக்களை வாங்கிய ஸ்டாலின், அங்கேயே சில மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.