கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மது போதையில் ஆற்றை கடக்க முயன்றபோது காருடன் அடித்து செல்லப்பட்ட 3 பேரில் இருவர் மீட்கப்பட்ட நிலையில் , மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் பாய்ந்து ஓடி வருகிறது . குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு மற்றும் பேரிடர் மீட்பு துறையினரின் சார்பில் ஆறுகளின் அருகே செல்லவோ , செல்பி எடுக்கவோ அல்லது ஆற்றை கடக்கவோ முயல வேண்டாம் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் அதனை மதிக்காமல் ஆற்றைக் கடக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், கள்ளக்குறிச்சியில் மதுபோதையில் கெடிலம் ஆற்றின் கரை பாலத்தை கடக்க முயன்ற 3 பேர் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கிளியூரைச் சேர்ந்த கிளியன், சங்கர், முருகன் ஆகியோர் அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது தந்தை இறந்த நிகழ்வுக்கு பெங்களூரில் இருந்து வரும் உறவினர்களை அழைத்து செல்வதற்காக இரவு ஒன்பது முப்பது மணி அளவில் திருக்கோவிலூர் சென்றுள்ளனர். மொகலார் கிராமத்திற்கு அருகே கெடிலம் ஆற்றின் தரைப்பாலத்தை அவர்கள் கடந்து செல்ல முயன்றனர். அப்போது அங்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதாகவும், எனவே ஆற்றை கடக்க முயற்சி செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளனர்..
ஆனால் காரில் இருந்தவர்கள் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில், மூவரும் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது ஆற்றை கடந்து உள்ளனர். அப்போது வெள்ளம் அதிகமாக வந்ததால் மூவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தோர் விரைவாக செயல்பட்டு சங்கர் என்பவரை காப்பாற்றினர். காரில் இருந்த கிளியனும் காரிலிருந்து வெளியேறி கரை ஏறிய நிலையில் உரிமையாளரான முருகன் காரிலேயே அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது...
Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?
இதையடுத்து திருக்கோவிலூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையினரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முருகனை தேடி வருகின்றனர். காரோடு ஓட்டுனர் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது