கனமழை எச்சரிக்கை திருப்பதிக்கு பாதயாத்திரையாக வர பக்தர்களுக்குத் தடை - தேவஸ்தானம் உத்தரவு
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் பாதயாத்திரையாக வர பக்தர்களுக்குத் தடை விதித்துள்ளது. இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் அலிபிரி வழி நடைபாதை மற்றும் சீனிவாசமங்காபுரம் வழியாக செல்லும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை ஆகியவற்றை தற்காலிகமாக மூட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானைக் காண தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தும் பாத யாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக ஏராளமான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

பாதயாத்திரையாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, ஏழுமலையானுக்கு தலைமுடி சமர்ப்பணம் செய்து மொட்டை போட்டு கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை, திருப்பதி மலையில் இலவச உணவு பெறும் பக்தர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் திருப்பதி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 கோடி பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். அவர்களில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக பாதயாத்திரையாக சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தனர்.
ஒவ்வொரு நாளும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திருப்பதி மலையில் இலவச உணவு வழங்கப்படுகிறது.சர்வதேச அளவில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்த எண்ணிக்கை திருப்பதி மலையில் அதிகமாக உள்ளது. இதன் அடிப்படையில் உலக சாதனை புத்தகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இடம்பிடித்துள்ளது.
ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச டோக்கன் ஆன்லைனில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதம் தொடங்கும் முன் தேவஸ்தானத்தின் அதிகராப்பூர்வ https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட்கள் அனைத்தும் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் விற்று தீர்ந்துவிட்டன. ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு அதிக அளவிலான அனுமதி வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.
சீனிவாசனுக்கு கடன் கொடுத்த குபேரன்... திருப்பதி ஏழுமலையானை தரிசித்தால் திருமண யோகம் கைகூடும்
கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு திருப்பதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.விரைவில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி கூறியுள்ளார்.
இதனிடையே கனமழை எச்சரிக்கை காரணமாக 17, 18 ஆகிய தேதிகளில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் அலிபிரி வழி நடைபாதை மற்றும் சீனிவாசமங்காபுரம் வழியாக செல்லும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை ஆகியவற்றை தற்காலிகமாக மூட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு பக்தர்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கவும் வாகனங்கள் மூலம் மட்டுமே 17, 18 ஆகிய தேதிகளில் திருப்பதி மலைக்கு வரவும் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.