திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க முடியாது - ரூ.300 கட்டண தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதி
திருமலை: கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் 11ம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாளொன்றுக்கு ரூ.300 டிக்கெட் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதை அடுத்து ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ஏழுமலையான் கோவில் வெறிச்சோடியது. உண்டியல் வருமானமும் தடைபட்டது.

படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் திருப்பதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
பின்னர் கோயில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விசேஷமாக நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் கூட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
கொரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியிலிருந்து இலவச தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருவதால், வரும் திங்கள்கிழமை முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 11 ஆம் தேதி இரவுடன் இலவச தரிசனம் ரத்து செய்யப்படும் எனவும் நாளொன்றுக்கு ரூ.300 டிக்கெட் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.