ஒரு கரும்புக்காக கலவரமான திருப்பூர்.. அடித்தே கொல்லப்பட்ட ரவி.. கம்பி எண்ணும் கண்ணன்!
திருப்பூர்: திருப்பூரில் கரும்பு சாப்பிடுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மின்வாரிய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் 60 அடி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா. பனியன் நிறுவன தொழிலாளி. இவரது நண்பர்கள் குமாரானந்தபுரத்தைச் சேர்ந்த ரவி, ரஞ்சித்குமார். இந்நிலையில் குமரானந்தபுரத்தை சேர்ந்த மின் வாரிய தற்காலிக ஊழியரான கண்ணன் என்பவர் அந்த பகுதியில் ஒரு கடையில் இருந்த கரும்பு கட்டில் இருந்து ஒரு கரும்பை எடுத்து சாப்பிட முயன்றுள்ளார்.

அப்போது ஜீவாவுக்கும், கண்ணனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கண்ணன் தான் வைத்திருந்த கத்தியால் ஜீவாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஜீவா மற்றும் அவரது நண்பர்கள் ரவி, ரஞ்சித் குமார் ஆகியோர் கண்ணனை தாக்கியுள்ளனர். சம்பவம் பற்றி அறிந்ததும் கண்ணனின் நண்பர்களான கார்த்திக், ஆனந்த் ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.
பின்னர் கண்ணன் தரப்புக்கும், ஜீவா தரப்புக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. கண்ணன், ஆனந்த், கார்த்திக் ஆகியோர் கத்தியால் ஜீவா தரப்பினரை சரமாரியாகக் குத்தியதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் காயமடைந்தனர்.
அனைவரும் திருப்பூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில் காயமடைந்த ரவி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த ரவி உயிரிழந்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.