ஆரம்பத்தில் என் சம்பளம் ரூ.400 தான்.. ஊதியம் குறைவு என கவலைப்படாதீர் -அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
திருப்பூர்: தனியார் நிறுவனங்களில் ஊதியம் குறைவாக கிடைப்பதாக இளைஞர்கள் மனம் தளரக்கூடாது என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கான அடிக்கோலாக அந்த வேலையை இளைஞர்கள் கருத வேண்டும் என அமைச்சர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
ரஜினிகாந்த்... கமல்ஹாசனால்... திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது... வாக்குகள் சிதறாது -கே.என்.நேரு

வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூரில் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி வளாகம் ஒன்றில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக அந்த விழாவில் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்தார்.

ரூ.400 ஊதியம்
மேலும், ஆரம்பக்காலத்தில் 400 ரூபாய் சம்பளத்திற்கு தான் ஒரு நிறுவனத்தில் தாம் வேலைக்கு சேர்ந்ததாகவும் அதுவும் அந்தக் காலக்கட்டத்திலேயே வேலைகிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்ததாகவும் தெரிவித்தார். மிகவும் கடினப்பட்டு அலைந்து திரிந்து வேலைக்கு சேர்ந்து 400 ரூபாய் ஊதியத்தை பெற்றதாக அவர் கூறினார்.

குறைந்த ஊதியம்
இதனால் தனியார்துறை நிறுவனங்களில் குறைந்த ஊதியம் தான் வழங்குகிறார்கள் என எண்ணி இளைஞர்கள் ஒதுங்காமல் அதனை முறையாக பயன்படுத்தி வெற்றிக்கான அடிக்கோலாக அமைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். உழைப்புக்கேற்ற பயன் நிச்சயம் நாளடைவில் கிடைத்தே தீரும் என நம்பிக்கையூட்டினார்.

உற்சாகம் தரும்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் இந்தப் பேச்சு வேலைவாய்ப்பு முகாமில் குறைந்த ஊதியத்தில் பணிகள் கிடைத்தவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் அமைந்திருந்தது. இதனிடையே அமைச்சர் தன்னை முன்னுதராணமாக கூறியக் கருத்தை நெட்டிசன்கள் சிலர் வழக்கம் போல் விமர்சிக்கத் தவறவில்லை.