6 ஆண்டு பகை.. வினையான செல்ஃபி.. திருப்பூரில் மாமனாரை சுட்டு தற்கொலை செய்த மருமகன்
திருப்பூர்: திருப்பூர், காங்கேயம் அருகே மாமனார், மருமகன் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் வெடித்து வந்தது. மோதல் வெடித்த நிலையில், இன்று காலை மாமனாரின் வீட்டுக்கு சென்ற மருமகன் துப்பாக்கியால் அவரை சுட்டு கொலை செய்துள்ளார். அதனை தொடர்ந்து அவரே அவரே சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊதியூர் அருகே உள்ள எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 70). விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் அம்பிகாவுக்கும், வடக்குபாளையம் படியூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்றழைக்கப்படும் முத்துகுமாருக்கும் (வயது 55) திருமணம் ஆகியுள்ளது. ராஜ்குமார் ஹாலோ பிளாக் கற்களை உற்பத்தி செய்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே பழனிசாமி - ராஜ்குமார் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இன்று காலை பழனிசாமியின் வீட்டுக்கு சென்ற ராஜ்குமார், மாமனார் பழனிசாமியை துப்பாக்கியில் சுட்டுவிட்டு, அவரும் தன்னே தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதுகுறித்து காங்கேயம் போலீஸ் கூறுகையில், "பழனிசாமி, ராஜ்குமார் இடையே கடந்த 6 ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்துள்ளது. இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்குமார் அம்பிகாவை அடித்துள்ளார். இதில் கோபமடைந்த பழனிசாமி தன்னுடைய உறவினர்களுடன் சென்று ராஜ்குமாரை தாக்கியுள்ளனர். இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து இரண்டு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு பழனிசாமி மற்றும் ராஜ்குமார் கடந்த ஆறு ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில்லாமல் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் உறவினர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் பழனிசாமி கலந்து கொண்டுள்ளார். அதேபோல அம்பிகாவும் கலந்துக்கொண்டுள்ளார். அப்போது பழனிசாமியும், அம்பிகாவும் சந்தித்துப் பேசியுள்ளனர். மேலும், அம்பிகா தன்னுடைய தந்தை பழனிசாமியுடன் இணைந்து செல்ஃபி எடுத்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் அம்பிகாவுடன் சண்டை போட்டுள்ளார். அதனுடன் நிற்காமல் இன்று காலை பழனிசாமியின் வீட்டுக்கே நேரடியாக சென்றுள்ளார். அங்கு இரண்டு பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ராஜ்குமார் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் எடுத்து பழனிசாமியின் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் தொடர்ந்து ஐந்து முறை சுட்டுள்ளார். இதில் பழனிசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
அதன் பிறகுதான் அடுத்த அதிர்ச்சி நடந்துள்ளது. பழனிசாமி உயிரிழந்த பிறகு, காரில் தன்னுடைய வீட்டுக்கு வந்துள்ளார். பிறகு தன்னுடைய மனைவி அம்பிகாவிடம், "சிறிது நேரத்துக்கு முன்பு உன் தந்தையைச் சுட்டுக் கொன்றுவிட்டேன்." என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் பழனிசாமியை சுட்ட அதே துப்பாக்கியால் ராஜ்குமார், நெற்றியில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்." என்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ், பழனிசாமி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ராஜ்குமார் துப்பாக்கி வைத்துக் கொள்ள காவல்துறையில் உரிய முறையில் உரிமம் பெற்றுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தன்னுடைய துப்பாக்கியை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார். அந்த துப்பாக்கியை கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ராஜ்குமார் காவல்துறையிடம் பெற்றுள்ளார். மாமனாரை கொலை செய்வதற்காகதான் அவர் துப்பாக்கியை பெற்றதும் விசாரணையில் தெரிந்துள்ளது.












Click it and Unblock the Notifications