திரிபுராவில் திரிணாமுல் காங். இளைஞர் அணி தலைவர் சாயோனி கோஷ் கைது- பாஜகவினரை கொல்ல முயன்றதாக வழக்கு
அகர்தலா: பாரதிய ஜனதா கட்சியினரை (பா.ஜ.க.) கொலை செய்ய முயற்சித்த வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவரான நடிகை சாயோனி கோஷ் திரிபுரா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திரிபுராவில் ஆளும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திரிபுராவில் நேற்று முதல்வர் பிப்லாப் தேவ் பங்கேற்ற பொதுகூட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு
இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த வழியே சாயோனி கோஷ் காரில் சென்றபடி ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அதில், முதல்வர் பிப்லாப் தேவ் பொதுக்கூட்டத்தில் மிக குறைவான நபர்களே பங்கேற்றதை விமர்சித்திருந்தார். இதை பார்த்த பாஜகவினர் அவர் கார் மீது தாக்குதல் நடத்தினர்.
|
நடிகை சாயோனி கோஷ் கைது
இந்த நிலையில் இன்று அகர்தலாவில் சாயோனி கோஷ் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பெண் போலீசார் சென்று விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும் காவல்நிலையத்துக்கு சென்றனர். அப்போது, பாஜக தொண்டர்களை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக வழக்குப் பதிவு செய்து சாயோனி கோஷ் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அபிஷேக் பானர்ஜிக்கு தடை
இச்சம்பவத்தைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி அகர்தலா புறப்பட்டார். ஆனால் திரிபுராவுக்குள் நுழைவதற்கு அபிஷேக் பானர்ஜிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், பாஜக குண்டர்களால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து திரிபுராவுக்கு பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிஷேக் பானர்ஜிக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது சர்வாதிகார போக்கு எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

பாஜகவினரால் தாக்குதல்
இதனிடையே அகர்தாலா கிழக்குகாவல்நிலையத்தில் பாஜகவினரால் தாங்கள் கொடூரமாக தாக்கப்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சாயோனி கோஷ் கைது செய்யப்பட்ட நிலையில் 25-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஹெல்மெட் அணிந்து கொண்டு லத்திகளால் காவல்நிலையத்துக்குள் வைத்து திரிணாமுல் தொண்டர்களை கொடூரமாக அடித்தனர் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் குணால் கோஷ், திரிபுராவில் காட்டாட்சி தர்பார் நடக்கிறது. போலீசார் முன்னிலையிலேயே நாங்கள் தாக்கப்பட்டோம். ஆனால் போலீசார் எதுவுமே தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் என கூறினார்.

அபிஷேக் பானர்ஜி ட்விட்டர் பதிவு
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி தமது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவினர் தாக்குதல் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போலீசார் முன்னிலையில் தலையில் ரத்தம் வழிந்தோடும் நிலையில் திரிணாமுல் தொண்டர் ஒருவர் பதற்றத்துடன் நிற்கிறார். மேலும் உச்சநீதிமன்றத்தில் உத்தரவுகளை கூட திரிபுரா முதல்வர் பிப்லாப் தேவ் மதிக்கவில்லை எனவும் சாடி உள்ளார்.