திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கே.என்.ராமஜெயம் படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகள்... துப்பு துலக்க முடியாத மர்மம்

Google Oneindia Tamil News

திருச்சி: திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ராமஜெயம் படுகொலை தொடர்பாக இதுவரை எந்த துப்பும் துலக்காதது மர்மம் நிறைந்ததாக உள்ளது. போலீஸ் விசாரணை, சி.பி.சி.ஐ.டி. விசாரணை என நடத்தப்பட்டு இப்போது சிபிஐ விசாரணை என்ற நிலைக்கு ராமஜெயம் கொலை வழக்கு நகர்ந்துள்ளது.

ஆனால் இதுவரை இந்த கொலை வழக்கில் எந்த விசாரணை முன்னேற்றமும் இல்லை என்றே தெரிகிறது.

நேரு தம்பி

நேரு தம்பி

திருச்சி மாவட்ட திமுகவின் முக்கிய முகமும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி கே.என். ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். திருச்சி திருவளர்சோலை என்ற இடத்தில் ராமஜெயத்தின் கை மற்றும் கால்கள் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்ததை கண்டு அன்று ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் பதைபதைத்தனர். அதிகாலை நடைபயிற்சிக்கு சென்ற ராமஜெயம் காலை 8 மணி வரை வீடு திரும்பாததை அடுத்து அவரது மனைவி லதா போலீஸில் புகார் அளித்தார்.

கண்டெடுப்பு

கண்டெடுப்பு

அந்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில், அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் ராமஜெயத்தில் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனிடையே இந்த தகவல் அறிந்து நெஞ்சிலும், தலையிலும் அடித்து கதறிய கே.என்.நேரு சென்னையில் இருந்து திருச்சிக்கு விரைந்து வந்தார். அவ்வாறு அவர் வரும் போது விழுப்புரம் அருகே அவரது காரின் முன்பக்க டயர் ஒன்று தனியாக கழன்று ஓடியது. அதிர்ஷ்டவசமாக அந்த விபத்தில் நேருவுக்கு எதுவும் ஆகவில்லை. மாற்றுவாகனம் ஏற்பாடு செய்து திருச்சி வந்தடைந்தார். இதனால் நேருவுக்கும் மர்ம நபர்கள் குறிவைத்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

அண்ணனுக்கு

அண்ணனுக்கு

கே.என்.ராமஜெயத்தை பொறுத்தவரை நேரடி அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும், திருச்சி மாவட்ட திமுகவை தன் கையில் வைத்திருந்தார். அண்ணன் கே.என்.நேருவுக்கு எல்லாமுமாக திகழ்ந்தார். இவரை திருச்சி மாவட்ட திமுகவினர் பாசமாகவும், மரியாதையாகவும் எம்.டி. என்று தான் அழைப்பார்கள். நேருவை பார்ப்பதற்கு முன்னர் ராமஜெயத்தை பார்ப்பதற்காக காலை 7 மணிக்கெல்லாம் ராமஜெயம் டென்னிஸ் விளையாடும் இடத்திற்கே கட்சிக்காரர்கள் சென்றுவிடுவார்கள்.

விரக்தி

விரக்தி

இந்த நிலையில் கே.என்.ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தம்பி துடிதுடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை எண்ணி விரக்தி நிலைக்கு சென்ற நேரு சிறிது காலம் அரசியலில் இருந்தே ஒதுங்கியிருந்தார். தலைக்கு டை அடிப்பதை தவிர்த்து வெள்ளை நிற முடியிலேயே வலம் வந்தார். கேட்கும் கட்சிக்காரர்களிடம் எல்லாம் இனி என்னய்யா இருக்கு எனக்கு என துயரம் தாளாமல் கண்ணீர் வடித்தார். ஒரு கட்டத்தில் கருணாநிதியும், ஸ்டாலினும் நேருவுக்கு ஆறுதல் கூறி தேற்றி பழையபடி கட்சிப் பணிகளில் ஈடுபட வைத்தனர்.

மர்மம்

மர்மம்

கே.என்.ராமஜெயம் கொலை வழக்கை நீண்ட நெடிய சட்ட போராட்டத்துக்கு பிறகு அவரது மனைவி தொடர்ந்த வழக்கு காரணமாக சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்டும் இந்த வழக்கில் எந்த துப்பும் துலங்மால் மர்மம் நிறைந்ததாகவே வழக்கின் பாதை செல்கிறது. இதனிடையே ஆண்டுதோறும் திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தனது கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ராமஜெயம் சிலைக்கு கட்சியினருடன் சென்று மரியாதை செலுத்தும் நேரு, இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தால் தனியாக சென்று அஞ்சலி செலுத்தினார்.

English summary
8 years since the assassination of kn ramajayam, the mystery that cannot be brushed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X