திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைவர்கள் நல்லா இருந்தாலும்.. அரசாங்கம் குழப்பும்.. அதிகாரிகளைதான் கும்பிடணும்.. தம்பி ராமையா நச்!

ஜெயலலிதா மிகப்பெரிய சக்தி என்று நடிகர் தம்பி ராமையா கூறுகிறார்

Google Oneindia Tamil News

திருச்சி: "எவ்வளவு பெரிய ஆளுமைகளாக இருந்தாலும், அவர்களின் அரசாங்கம் குழப்பத்தில்தான் செல்லும்... அதனால்தான் அரசியல்வாதிகளை விட அதிகாரிகளை பார்த்து கையெடுத்து கும்பிட நினைப்பவன்.. நல்ல அதிகாரிகளின், மக்கள் நலனை உள்வாங்கிய ஆலோசனைகளுக்குச் செவிமடுக்காமல் எந்த ஆட்சியும் சிறப்பாகச் செல்ல இயலாது" என்று பிரபல நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பிறந்து வளந்தவர்தான் ராமையா.. இவரது குடும்பத்தில் எல்லோரும் இவரை தம்பி, தம்பி என்றுதான் கூப்பிடுவார்களாம்... அதனால்தான் துணை பெயராக "தம்பி" ராமையா என்றே சினிமா உலகிலும் அழைக்கப்பட்டார்.

actor thambi ramaiya special interview

இவர் நடிகர் மட்டுமில்லை.. பாடலாசிரியர் மட்டுமில்லை.. இயக்குனரும் கூட.. வடிவேலு நடித்த "இந்திரலோகத்தில் நா.அழகப்பன்" என்னும் படத்தை இவர் இயக்கி, நடித்துள்ளார். கும்கி, கழுகு, தலைவா உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார்... இதில், "மைனா" படத்தின் துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார். இந்த படம்தான் அவரது வாழ்க்கை மாறிய ஒரு திருப்புமுனையாகும்.

தற்போது, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை "தலைவி" என்ற பெயரில் தமிழிலும், "ஜெயா" என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதில் தம்பி ராமையா முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பாக "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக அவரை சந்தித்தோம்.. அப்போது அவர் இந்த படத்தில் நடிப்பதை பற்றி பெருமிதம் கொண்டார்.. பல்வேறு தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.. அவைதான் இவை:

"காசுக்குக் கூத்தாடுபவன்தான் கூத்தாடி. இந்த அவசரமான உலகில் என்றைக்காவது நான் பொதுவெளியில் குரல் கொடுத்திருக்கிறேனா? இல்லை. ஏனெனில், எங்கேயாவது செய்திகள் கிடைத்துவிடாதா என ஒரு கூட்டம் தேடி அலைந்துகொண்டிருக்கிறது. நானாக முன்வந்து ஆற்றில் போய் உட்கார்ந்துகொள்ளக் கூடாது. தற்போது இளைஞர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுப்படுவது மிகவும் வருந்த கூடிய செயலாக இருக்கிறது. அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமால் எதிர்கால சாதனைகளை பற்றி யோசிக்க வேண்டும்.

கேள்வி: தற்போது என்னென்ன படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

பதில்: லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி தம்பியுடன் 'பூமி', சசிகுமாருடன் 'ராஜவம்சம்', சற்குணம் இயக்கத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கும் 'எங்க பாட்டன் சொத்து', ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'தலைவி', 'இந்தியன் 2' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன்.

கேள்வி: சினிமாதான் மனிதகுல சீரழிவுக்கு காரணம்.. அது உண்மையை மறைத்தோ அல்லது கூடுதலாக மெருகேற்றியோ தருவதால், பார்ப்பவர்கள் அதையே உண்மை என்று கருதும் நிலை உள்ளதாகவும், சினிமா பார்ப்பதால்தான் கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் நடப்பதாகவும் அரசியல்வாதிகள் பலரும், இன்னபிற பிரபலங்களும் குற்றஞ்சாட்டுவது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: இதைத்தான் நூறு வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது மக்கள் அதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்ற அவர்களின் மனநிலையைப் பொருத்தது. எம்.ஜி.ஆர். குடிக்காமல் நடித்தார். சிவாஜி குடிப்பவராக நடித்தார். திரைப்படத் துறையினர் தண்ணீர் போன்று. குளத்தில் விழுந்தால் குளத்து நீர், கிணற்றில் விழுந்தால் கிணற்று நீர், செம்மண்ணில் விழுந்தால் செந்நிற நீர்... அதுபோல, மனிதர்களின் மனோபாவத்திற்கேற்ப திரைப்படங்கள் அவர்களால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பெற்றோர் தம் மக்களைச் சிறப்பாக வளர்த்திருந்தால், ஒரு திரைப்படத்தைப் பார்ப்பவர் அதை திரைப்படமாக மட்டுமே பார்ப்பார். இங்கே நடப்பது என்னவெனில், தவறிழைப்பது ஒருவனின் அடிமனதில் இருந்திருந்து, அவர் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு, "அதுதான் எனது தவறுக்குக் காரணம்" என்று சொல்வது ஏற்புடையதல்ல.

கேள்வி: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? சில ஆண்டுகளாகவே அவர் "அரசியலுக்கு வருவேன்" என்று கூறிக்கொண்டே இருக்கிறாரே?

பதில்: சில ஆண்டுகள் அல்ல! சுமார் 25 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். அவர் வரட்டும்; வராமல் போகட்டும். அதுகுறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. 'அரசியல் satire' என்று ஒரு படம் எடுக்கப் போகிறேன். நீங்கள் கேட்பனவற்றுக்கெல்லாம் அதில் பதில் இருக்கும்.

கேள்வி: கமலஹாஸன் அரசியலுக்கு வருவேன் என சொல்லிக் கொண்டிருக்கவில்லை. ஆனால், 'மக்கள் நீதி மய்யம்' எனும் பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிவிட்டார். இதனால், ரஜினிகாந்தின் மவுசு குறையுமா?

பதில்: அவரது களம், ரசிகர்கள் வேறு; இவரது களமும், ரசிகர்களும் வேறு. அவர் பகலில் சூரியனாக இருந்தால், இவர் இரவில் நிலாவாக இருக்கிறார்.

கேள்வி: நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, குழப்பத்தில் இருக்கிறது. நீங்கள் அதன் உறுப்பினராக இருக்கிறீர்களே? இதுகுறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்: தமிழக அரசு அதிகாரி ஒருவரின் பார்வையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் இன்னும் முடிவு அறிவிக்கப்படாமல் உள்ளது. கட்டிய கட்டிடம் பாதியில் நிற்கிறபோது எல்லோருக்குமே அது கவலையாகத்தான் இருக்கும். அப்படித்தான் எனக்கும்.

கேள்வி:தமிழகத்தின் இரண்டு அரசியல் ஆளுமைகளாக இருந்த கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் தற்போது இல்லாத சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: யார் முதலமைச்சராக வந்தாலும், மரியாதைக்குரிய - அனுபவமிக்க அரசு அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்கிறபோது அந்த அரசு நிர்வாகம் தெளிவாகவும், சிறப்பாகவும் இருக்கும். அப்படிச் செய்யாதபோது, எவ்வளவு பெரிய ஆளுமைகளாக இருந்தாலும், அவர்களின் அரசாங்கம் குழப்பத்தில்தான் செல்லும். எனவே நான் அரசியல்வாதிகளை விட அதிகாரிகளைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட நினைப்பவன். நல்ல அதிகாரிகளின் மக்கள் நலனை உள்வாங்கிய ஆலோசனைகளுக்குச் செவிமடுக்காமல் எந்த ஆட்சியும் சிறப்பாகச் செல்ல இயலாது.

கேள்வி : மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் வேடத்தில் உங்கள் நடிப்பு மற்றும் அந்த படத்தில் நடிக்க எப்படி வாய்ப்பு வந்தது

பதில் : உலகத்திலேயே மிகப்பெரிய பெண் சக்தி அப்படி ஆண் உலகத்தில் ஆளுமைமிக்க தலைவராக மறைந்த முதலைமைச்சர் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட வாழ்க்கை வரலாறு படத்தில் நானும் நடிப்பதில் மிக பெருமையாக கருதுகிறேன். விரைவில் இயக்குநர் எந்த கேரக்டர் என்று சொல்லுவார்கள். அதிலும் சிறந்த நடிப்பை வெளி காட்டுவேன். இதில் சமுத்திர கனி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்தியில் தயராகும் படத்திலும் நானும் நடிக்கிறேன். அதுவும் பெருமையாக இருக்கிறது.

தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா பணியாற்றிய காலத்தில் அவரது பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய நிர்வாகத் திறமையை என்னால் மறக்க முடியாது அவருடைய மறைவு தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கே பெரிய இழப்பாகும்" என்றார்.

English summary
"Jayalalitha is the world's most powerful leader" tamil famous actor and director special interview for one india tamil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X