என்னாது.. ஓ.பி.எஸ். திருச்சி வருகிறாரா? எனக்கே தெரியாதே! அதிமுக மாவட்டச் செயலாளர் கொடுத்த ஷாக்!
திருச்சி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சி வரும் தகவல் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளருக்கே தெரிவிக்கப்படவில்லை என்பது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பி.எஸ்.ஆதரவாளர்கள் சிலருக்கு மட்டும் அவரது திருச்சி வருகை குறித்த தகவல் முன் கூட்டியே சொல்லப்பட்டுள்ளது.
உள்ளூர் செய்தியாளர் அலர்ட் செய்த பிறகு தான் மாவட்டச் செயலாளர் குமாருக்கே ஓ.பி.எஸ்.ஸின் திருச்சி பயணம் பற்றிய தகவல் தெரிந்திருக்கிறது.
உழைப்பாளர் தினத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர் அஜித் - பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஓ.பி.எஸ்.

தஞ்சை மாவட்டம்
தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கவும் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திருச்சி வழியாக அந்தக் கிராமத்திற்கு சென்றார். முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் திருச்சி வரும் தகவல் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தரப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் புறநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான குமாருக்கு இது தொடர்பான எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

செய்தியாளர்கள் அலர்ட்
இதனிடையே இது தொடர்பாக உள்ளூர் செய்தியாளர்கள் சிலர் அதிமுக மாவட்டச் செயலாளர் குமாரை தொடர்புகொண்டு ஒ.பி.எஸ்.ஸின் பயண நிகழ்ச்சி நிரல் குறித்து கேட்டிருக்கிறார்கள். அப்போது தான் அவருக்கு இந்த விவரமே தெரியவந்திருக்கிறது. ஒரு மாவட்டச் செயலாளராகிய தனக்கே தகவல் அறிவிக்காமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் எப்படி தனது மாவட்டத்திற்கு வரலாம் என குமார் ஆதங்கப்பட்டிருக்கிறார். திருச்சி மாவட்டத்திற்கென தனியார் வரவில்லை என்றும் தஞ்சை மாவட்டத்திற்கு செல்லும் வழியில் ஆன் தி வே தான் திருச்சி என்பதால் இது குறித்து கவனத்தில் கொள்ளவில்லை என்பது ஓ.பி.எஸ்.தரப்பு பதிலாக உள்ளது.

பிசுபிசுத்த வரவேற்பு
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படும் வரவேற்பில் கால்வாசி அளவுக்கு கூட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.க்கு தஞ்சை மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது கொடுக்கப்படவில்லை. பெயருக்கு ஓரிரு இடங்களில் மட்டுமே ஓ.பி.எஸ்.க்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அதுவும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி இல்லை. முக்கிய நிர்வாகிகள் பலரும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தலையே காட்டவில்லை. இதனால் ஒ.பி.எஸ்.க்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பொறுத்தவரை பிசுபிசுத்துக் காணப்பட்டது. இது ஓ.பி.எஸ்.க்கு உள்ளுக்குள் அதிர்ச்சியையும், கோபத்தையும் அளித்தால் கூட அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது தஞ்சை மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

என்ன காரணம்
அண்மையில் நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களே பெருவாரியான இடங்களில் பொறுப்புகளுக்கு வந்திருக்கின்றனர். இதனால் அவருக்கு இணையாக ஒ.பி.எஸ்.க்கு வரவேரற்பும் மரியாதையும் அளிக்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனிடையே தன்னை நம்பியவர்களுக்கு ஓ.பி.எஸ். இதுவரை பெரிதாக எதுவும் செய்யாததும் இது போன்ற அவருக்கு பின்னடைவை தரும் நிகழ்வுகளுக்கு முக்கியக் காரணமாகும்.