திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்த தயாராகும் திமுக... திருப்புமுனையை தருமா?

தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய திருச்சியில், தற்போது நடைபெற இருக்கும் 11வது மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

திருச்சி: திமுகவின் 11வது மாநில மாநாடு திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கே.என். நேரு செய்யத் தொடங்கி விட்டார். மாநாடு நடைபெறும் திடலை பார்வையிட்ட ஸ்டாலின் ஏற்பாடுகளை கேட்டறிந்தார். திருச்சி மாநாடு திமுகவிற்கு பல்வேறு திருப்பு முனைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள இந்த நேரத்தில் நடைபெறும் மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்துமா என்று பார்க்கலாம்.

தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். ஆளும் கட்சி, எதிர்கட்சி என இரு கட்சியினரும் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை நேரில் சந்தித்து கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

DMKs 11th State Level Conference in Trichy Will it give a turning point?

முதன் முறையாக ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க.வும், கருணாநிதி இல்லாமல் தி.மு.க.வும் தேர்தலை சந்திக்கிறது. வழக்கத்தைவிட இந்த சட்டசபைத் தேர்தல் அரசியல் நோக்கர்கள் மற்றும் பொதுமக்களால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க. சார்பில் பிரமாண்ட மாநில மாநாட்டினை நடத்த அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது.

கடந்த 1949ஆம் ஆண்டு திமுக தொடங்கப்பட்டது. திமுகவின் முதல் மாநாடு 1951ஆம் ஆண்டு சென்னையில் நடந்தது. அப்போது தி.மு.க. தேர்தலில் பங்கெடுக்காத இயக்கமாக இருந்தது. 1956ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தான், சட்டசபைத் தேர்தலில் திமுக போட்டியிடலாமா, வேண்டாமா? என்பது குறித்து வாக்கெடுப்பை அண்ணா நடத்தினார்.

திருச்சி மாநாட்டில்தான் தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநாட்டில் கலந்துகொண்டோரில் 56 ஆயிரத்து 942 பேர் தேர்தலில் தி.மு.க. போட்டியிடலாம் என்றும், 4 ஆயிரத்து 203 பேர் போட்டியிட வேண்டாம் என்றும் வாக்களித்தனர். பெரும்பாலானோர் தெரிவித்த கருத்து அடிப்படையில் தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முதன் முறையாக தி.மு.க. போட்டியிட்டது. அந்த தேர்தலில் 15 இடங்களை தி.மு.க. கைப்பற்றியது.

அதனைத்தொடர்ந்து 1962ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் தி.மு.க. போட்டியிட்டு, 50 இடங்களை கைப்பற்றியது. 1967ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் 179 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியிருந்தது. அண்ணா மறைவுக்கு பின்னர் மீண்டும் 1970ஆம் தி.மு.க. தலைவர் கருணாநிதி திருச்சியில் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, ஆதிக்கமற்ற சமுதாயம் போன்ற ஐம்பெரும் முழக்கங்களை முன்வைத்தார்.

அதன்பிறகு 1990, 1996, 2006, 2014-ம் ஆண்டுகளில் திருச்சியில் தி.மு.க. மாநாடு நடந்துள்ளது. தி.மு.க.வை பொறுத்தவரை திருச்சியில் மாநாடு நடந்தால் அது திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம்தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. பிரதிநிதிகள் மாநாடும் திருச்சியில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

இதுவரை நடந்த தி.மு.க.வின் 10 மாநில மாநாடுகளில் 5 மாநாடுகள் திருச்சியில் நடந்துள்ளன. தற்போது 11வது தி.மு.க. மாநில மாநாட்டினை திருச்சியில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநாடு ஏற்பாடுகளுக்கு கருணாநிதியால் பாராட்டு பெற்ற முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பிரம்மாண்டமாக இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே சுமார் 300 ஏக்கர் நிலம் இதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு மாநாடு நடத்த தயார் செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் மக்கள் கிராமசபை கூட்டத்தை முடித்துவிட்டு, திருச்சி வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சிறுகனூர் அருகே மாநாடு நடைபெறும் இடத்துக்கு காரில் வந்தார். காரில் இருந்து இறங்கி மாநாடு நடைபெறும் திடலுக்கு சென்றார். அங்கு மாநாட்டின் முகப்பு பகுதி அமையும் இடம், மேடை அமையும் இடம் ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

அப்போது மாநாடு அமையவுள்ள இடத்தின் வரைபடத்தையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் மாநாட்டு பணிகள் குறித்து கே.என்.நேரு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி உள்பட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். மாநாடு எந்த பெயரில் நடத்தப்படும் என்பதை மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

2011ஆம் ஆண்டு முதல் திமுக எதிர்கட்சியாகவே உள்ளது. திமுக ஆளுங்கட்சியாக அமரவேண்டும் மு.க ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்று தொண்டர்கள் ஆசைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். திருச்சி மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்துமா? ஆளுங்கட்சி வரிசையில் திமுக அமருமா என்பதை இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு முடிவு செய்யும்.

English summary
The 11th State Conference of the DMK is to be held in a grand manner in Trichy. Arrangements for this were made by K.N. Nehru has started to do. Stalin visited the stadium and inquired about the arrangements. The Trichy conference has marked various turning points for the DMK. It remains to be seen whether the conference at this time of the Assembly elections will be a turning point.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X