திருச்சியில் இருந்து திருப்பதிக்கு ஜன.18 முதல் விமான சேவை - ஏழுமலையானை பறந்து போய் தரிசிக்கலாம்
திருச்சி: இண்டிகோ நிறுவனம் திருச்சியிலிருந்து வரும்18 ஆம் தேதி முதல் திருப்பதிக்கு விமான சேவையைத் தொடங்குகிறது. வாரத்தில் செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு விமான சேவை வழங்கப்பட வேண்டுமென விமான பயணிகள் மற்றும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், முதல் முறையாக இண்டிகோ நிறுவனம் மதுரையில் இருந்து திருப்பதிக்கு கடந்த நவம்பர் 19ஆம் தேதி முதல் விமானத்தை இயக்கி வருகிறது.
இந்த நிலையில் திருச்சியிலிருந்து ஜனவரி 18ஆம் தேதி முதல் திருப்பதிக்கு விமான சேவையைத் இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது. இந்த விமான சேவையால் இனி ஏழுமலையான் தரிசனம் பக்தர்களுக்கு எளிதாகவே இருக்கும்.

திருப்பதிக்கு விமான சேவை
ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சாலை மார்க்கமாகவும், ரயில் மூலமாகவும் திருப்பதி வரும் பக்தர்கள் மலைமீது வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். மதுரை, திருச்சியில் இருந்து திருப்பதிக்கு விமானம் இயக்க வேண்டும் என்பது ஏழுமலையான் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை அதனை ஏற்று மதுரை, திருச்சியில் இருந்து விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கியுள்ளது.

ஜனவரி 18 முதல் விமான சேவை
இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், இந்த நிறுவனம் சார்பில் திருச்சியிலிருந்து சிங்கப்பூா், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு , டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன இதைத் தொடா்ந்து, திருச்சியிலிருந்து திருப்பதிக்கு விமான சேவை ஜனவரி 18ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை மணி நேர பயணம்
வாரத்தில் செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சேவை இருக்கும். திருப்பதியிலிருந்து மாலை 5 மணிக்குப் புறப்படும் விமானம் மாலை 6.20 மணிக்குத் திருச்சி வந்தடையும். இதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு, திருப்பதிக்கு இரவு 8 மணிக்கு விமானம் சென்றடையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து திருப்பதிக்கு ரயில் அல்லது பேருந்து மூலம் பயணம் செய்தால் 8 மணி நேரத்திற்கு மேல் ஆகும். இனி விமானம் மூலம் ஒன்றரை மணி நேரத்தில் திருப்பதிக்கு சென்று விடலாம் என்பதால் பக்தர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான செய்திதான்.

பக்தர்கள் மகிழ்ச்சி
மதுரையில் இருந்து நவம்பர் 19 முதல் திருப்பதிக்கு விமான சேவை செயல்பட்டு வருகிறது. மதுரையில் இருந்து தினமும் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு திருப்பதி சென்றடையும். மீண்டும் அதே விமானம் மாலை 4.40 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு 6.05 மணிக்கு மதுரை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் மதுரையிலிருந்து திருப்பதி செல்ல இந்த விமான சேவை, பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. தென் மாவட்ட மக்கள் திருப்பதி ஏழுமலையானை விமானத்தில் பறந்து போய் ஒரே நாளில் தரிசனம் செய்து விட்டு வந்து விடலாம்.