• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நல்லாசிரியர் விருது பெற்ற திருச்சி ஆர்.சி. மாதிரி பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் இருதயராஜா காலமானார்

|

திருச்சி: திருச்சி RC மாதிரி பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர், F.இருதயராஜா இன்று (15-12-2020, செவ்வாய்கிழமை) அதிகாலை காலமானார்.

இருதயராஜா திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் பகுதியில் இருக்கும் RC மாதிரி பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஆவார். இவர் இடைக்காட்டூரில் 1943ல் ஜூலை 8ம் தேதி பிறந்தார்.

Former Headmaster of Trichy RC Model School, F.Iruthayaraja passed away

இளம்வயதில், இவரது தந்தையார் இறப்பிற்கு பிறகு சிறிய தாத்தா அருட்பணி இராயப்பரால், குடும்பத்தோடு திருச்சிக்கு இடம் பெயர்ந்தார். இவருடன் ஆசிரியர் ராயப்பர் , ஒரு அக்காள் , ஒரு தங்கை மற்றும் உடல் நலிவுற்ற அண்ணன் ஒருவரும் உண்டு. இருதயராஜாவின் அக்கா மகன் திருச்சி காம்பியன் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தர்மநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பணி, RC உயர்நிலைப்பள்ளியில் ஏழை குழந்தைகளுக்கான விடுதியில் தொடங்கியது. மேலும் அவரது பணி RC மாதிரிப்பள்ளி, மரியன்னை நடுநிலைப்பள்ளி, மேலப்புதூர் (6,7,8 ம் வகுப்புகள் ) பின்னர் மீண்டும் RC மேல்நிலைப்பள்ளி என தொடர்ந்தது . RCஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்று RC மாதிரி பள்ளியில் பொறுப்பேற்றார் . RC கல்வி வளாகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் தன் வாழ்நாளை கல்விக்காக அர்ப்பணித்தவர் . திருமணத்திற்கு முன்பு வரை விடுப்பே எடுக்காதவர்; விடுப்பு எடுத்தாலும் தன் வேலை முடிந்தவுடன் பள்ளிக்கு வந்து பணியை தொடங்கிவிடுவார் .

1982-83 கல்வி ஆண்டில் RC மாதிரிப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக திறம்பட பணியாற்றி பவள விழாவினை சிறப்பாக நடத்தி காட்டினார் . மீண்டும் 1983-87ல் RC மேல்நிலை பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி, நிர்வாகி அருட் தந்தை சூசைராஜால் RC மாதிரி பள்ளியின் தலைமை ஆசிரியராக மீண்டும் நியமிக்கப்பட்டு 2002 மே 31ம் தேதி வரை 16 ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். அவர் தன் பணிக்காலத்தில் பள்ளியில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கல்வி உபகரணங்கள், ஆசிரியர் -மாணவர்களுக்கான மேஜை- நாற்காலிகள், பீரோ உள்ளிட்ட பொருட்களை சேகரித்து கற்றல் மேம்பட உதவினார் .

Former Headmaster of Trichy RC Model School, F.Iruthayaraja passed away

அன்றைய நாளில் கணினி கல்வி தேவையை அறிந்து மாணவர்களுக்கான கணினி உள்ளிட்ட கல்வி சாதனங்கள் கிடைத்திட உதவி புரிந்தவர் . ஏழு ஆசிரியர்கள் இருந்த RC மாதிரி பள்ளியை (1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ) 10 ஆசிரியர்கள் என்ற நிலைக்கு உயர்த்தி , ஆண் ஆசிரியர்கள் மட்டுமே என்ற நிலையை மாற்றி இருபாலர் ஆசிரியர்கள் பணியாற்ற வழி செய்தார். இவரது சிறப்பான ஆசிரியர் பணியை பாராட்டி 1992ம் ஆண்டில் அன்றைய தமிழக அரசு,
சிறந்த பெற்றோர் -ஆசிரியர் கழக செயல்பாட்டிற்கான பதக்கம் மற்றும் விருதினை வழங்கியது. மேலும், 1996ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அவரது ஆசிரியர் பணியை பாராட்டி மாநிலத்தின் சிறந்த நல்லாசிரியர் விருது மற்றும் பதக்கம் அளித்து பெருமைப்படுத்தியது .

Former Headmaster of Trichy RC Model School, F.Iruthayaraja passed away

பல ஏழை மாணவர்களின் தேவை அறிந்து அவர்கள் கல்வி பயில பொருளுதவியும் அடிப்படை தேவைகளையும் அளித்து மாணவர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இவர் சிறந்த பாடலாசிரியர், சிறந்த நாடக வசன கர்த்தா, சிறந்த நடிகர் , சிறந்த இயக்குனர் என பன்முகத்திறன் பெற்றவர் . அவரது வகுப்பறையில் பாடம் நடத்தும் முறை நேரில் மாணவர்கள் ரசித்து பார்ப்பது போன்று பாடம் கண்முன்னே நடித்து காட்டப்படும்.

பலர் வாழ்வில் ஒளியேற்றிய அவரை இறைவன் தன்னில் இணைத்துக்கொண்டார் . அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் . ஆசிரியரது நல்லடக்கம் இன்று (15-12-2020) மாலை 5 மணியளவில் திருச்சி பீமநகர் ஆங்கிலோ - இந்தியன் கல்லறையில் நடைபெறுகிறது.

இந்த தகவல்களை ஆசிரியர் வெனிஸ் ராஜ் முன்னாள் மாணவர்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டார். இருதயராஜா மறைவுக்கு, RC மாதிரி , மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
English summary
Former Headmaster of Trichy RC Model School, F.Iruthayaraja passed away early today (15-12-2020)
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X